உள்நாட்டு செய்தி
குற்றச் சொத்துக்களை வைத்திருப்போருக்கு கடும் தண்டனை…!
குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பவர்கள் அல்லது அதனுடன் ஏதேனும் பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள், சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களை செய்தவர்களாக கருதப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் அவர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 மில்லியன் ரூபாய் அபராதம் மற்றும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் அமைச்சகத்தால் இந்த வாரம் வெளியிடப்பட்ட “குற்றத்தின் வருமானம்” என்ற புதிய யோசனையில் இந்த விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.
இந்த யோசனையின் மூலம், குற்றத்தின் வருமானத்தை மீட்டெடுப்பதற்கும், சர்வதேச ஒத்துழைப்பு மூலம், விசாரணைகளை நடத்தவும் முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின்படி, குற்றத்தின் வருமானத்தைப் பற்றிய அறிவு அல்லது தகவல்களைக் கொண்ட எந்தவொருவரும், அத்தகைய தகவல்களை, பொலிஸ் அதிகாரியிடமோ அல்லது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் நியமிக்கப்பட்ட அதிகாரியிடமோ தெரிவிக்கத் தவறினால் அவர் குற்றமாக கருதப்படும்.
அதேநேரம் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்களைக் கண்டறிதல், அடையாளம் காணுதல், தேடுதல், கண்டறிதல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவற்றிற்காக மற்ற நாடுகளின் நிர்வாக, சட்ட அமுலாக்க மற்றும் நீதித்துறை தகுதிவாய்ந்த அதிகாரிகளிடம் இருந்து உதவி பெறவும் இந்த சட்டம் அதிகாரங்களை வழங்குகிறது.