Connect with us

அரசியல்

ரூபாவின் பெறுமதி வலுவை பற்றிய ஜனாதிபதியின் கடுமையான எச்சரிக்கை !

Published

on

இனி வர இருக்கும் 2026,2027 ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ரூபா வலுவாக இருக்க வேண்டும். ரூபாவை வலுப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். எனவே, உண்மையை அறிந்து முன்னேற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தோடு நாங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மகாசங்கத்தினரின் ஆலோசனைகளைப் பெற்று தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பது எனது நோக்கமாக இருந்தது. மேலும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தில், மகா சங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் நான் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

இக்கட்டான நேரத்தில் இந்த நாட்டை பொறுப்பேற்றேன். 2019ஆம் ஆண்டு நாம் நாட்டைக் கையளிக்கும் போது திறைசேரியில் 07 பில்லியன் டொலர்கள் இருந்தன. ஆனால் 2022 இல் நான் நாட்டை பொறுப்பேற்ற போது அரசாங்கத்திடம் நூறு மில்லியன் டொலர்கள் கூட இருக்கவில்லை.

எரிபொருள், உரம், மருந்து எதுவும் இல்லை. இந்நாட்டின் மக்களால் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் கூட வழங்க முடியாத நிலை உருவாகியிருந்தது.

அன்று இந்த நாட்டை பொறுப்பேற்கும் நேரத்தில், நான் மகா சங்கத்தினரின் ஆசிகளைப் பெற்றேன். சம்பிரதாய ரீதியில் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டிராத அரசாங்கத்தை நாங்கள் நிறுவினோம். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அனைத்து குழுக்களும் இணைந்து முன்னெடுத்துச் சென்றன.

மேலும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் போது அரசாங்கம் என்ற வகையில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை முதலில் ஸ்திரப்படுத்த முடிந்தது.

இன்று சிலர் 2022 இல் நடந்ததை மறந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் அதே வேளையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நாங்கள் செயற்பட்டோம். மேலும் எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

ஒரு அரசாங்கம் என்ற வகையில், இந்நாட்டில் துன்பப்படும் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நாம் மேலும் முன்னோ்ககிச் செல்ல வேண்டும். நாட்டை மீட்பதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காகவே இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்தப் பாதையில் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும். இல்லையேல் இந்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது.

இன்று ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் சிலர் வரியைக் குறைப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் என்ன நடக்கும் ? அவ்வாறானதொரு செயலைச் செய்தால் இந்நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத நிலை உருவாகும்.

நாங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு, அந்நியக் கையிருப்பை அதிகரிக்கச் செய்தோம். ரூபா வலுவடைந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ரூபா வலுவாக இருக்க வேண்டும்.

ரூபாவை வலுப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். எனவே, உண்மையை அறிந்து முன்னேற வேண்டும். மீண்டும் பொய்யான பிரச்சாரங்களில் ஏமாற வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *