உள்நாட்டு செய்தி
சத்திர சிகிச்சை தவறால் நபர் உயிரிழப்பு…!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்த நபரின் மரணத்திற்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த நபர் நரம்பு துண்டிக்கப்பட்டு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டமையினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த போதிலும், நரம்பில் ஏதோ குத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மெதிரிகிரியவில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சஞ்சன ராஜபக்ஷ, விபத்திற்குள்ளாகியுள்ளார்.
இதன் காரணமாக இடது கை உணர்ச்சியற்று போயுள்ளது. இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர் ஒருவரை சந்தித்த போது நரம்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு சுமார் 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அரச வைத்தியசாலையில் செய்தால் நீண்ட நாள் காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் வைத்தியர் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவைசிகிச்சைக்குப் பின்னர், அவர் சுயநினைவை இழந்து, உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து மூளை இறக்கத் தொடங்கியதால், நோயாளியைக் காப்பாற்ற முடியாததால், சுவாசக் கருவியை அகற்றுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், அவரது உடலை அடக்கம் செய்யுமாறு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.