முக்கிய செய்தி
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டம் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் பூர்த்தி செய்யப்படும்
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதியைப் பெற்று முழுமையாக பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், அவர்களுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,
“மிக மோசமான நிலைக்குச் சென்ற எமது நாடு தற்போது மெல்ல மெல்ல வளர்ந்து வருகின்றது. இந்த வளர்ச்சி தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
எமது நாட்டில் கடந்த பொருளாதார நெருக்கடியின் போது கட்டுமானத் துறை மற்றும் வீதிகளின் புனரமைப்புப் பணிகள் உட்பட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்குப் பின்னர் தற்போது மீண்டும் அவை ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக உற்பத்தித் துறையை அதிகரிக்கும் நோக்கத்தோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலக வங்கியின் வேலைத்திட்டத்தின் ஊடாக கிராமப்புறங்களையும் நகரங்களையும் இணைக்கும் வீதிகளின் பணிகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்ட்ட ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகள் அபிவிருத்திப் பணிகளும் முடியுமானவரை நிறைவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நிதியைப் பெற்று முழுமையாக நிறைவு செய்ய முடியும் என்று நம்புகின்றோம். அதேபோன்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட கிராமிய பாலங்களின் நிர்மாணப்பணிகளையும் நாம் முடியுமானவரை நிறைவுசெய்துள்ளோம். எஞ்சியுள்ளவற்றை அமைச்சரவைப் பத்திரம் ஊடாக பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். எனவே கட்டுமானத்துறை விரைவுபடுத்தப்படும்போது பொருளாதாரமும் வளர்ச்சிபெறும். அதற்கான வேலைத்திட்டங்களே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அவர்களின் வயது, வீட்டுப் பொருளாதார நிலைமை காரணமாக அவர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அது குறித்தும் நாம் எமது அவதானத்தை செலுத்தியுள்ளோம். அவர்களுக்கு அரச மற்றும் தனியார் துறையிலும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடி வருகின்றோம்” என்று இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்.