முக்கிய செய்தி
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியலில் ஈடுபட்டால், நாட்டில்மூன்றாவது உள்நாட்டுப் போர் ஏற்படுவதைத் தடுக்க முடியாது….!
பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் புதிய பொருளாதார பரிமாற்றச்
சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், சிலர் வெளியே வந்து மக்களை தவறாக
வழிநடத்துகிறார்கள்.
-பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் புதிய பொருளாதார பரிமாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், சிலர் வெளியே வந்து மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கருத்துக்களை முன்வைப்பது வருந்தத்தக்கது எனவும், சம்பிரதாய பிளவுகளை ஒதுக்கிவிட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அனைவரும் உடன்படுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ,
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இந்த நாட்டின் 09ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான முக்கியமான தேர்தலாக அமையும். தற்போது பழைய அரசியல் கட்சிகள் சம்பிரதாய முறையில் அரசியல் பிரச்சாரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நம் நாட்டின் வரலாற்றில், பல கிளர்ச்சிகளும் உள்நாட்டுப் போர்களும் நடந்துள்ளன. கடந்த ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போராட்டமும் நடந்தது. எனவே, மீண்டும் அதேபோன்று மூன்றாவது உள்நாட்டு யுத்தம் போன்ற நிலைமை உருவாகும் வகையில் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்துவார்களா? அல்லது, அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு செப்டம்பர் 21ஆம் திகதி தமது வாக்குகளைப் பயன்படுத்துவார்களா என்ற கேள்வி இலங்கை மக்கள் முன்னிலையில் உள்ளது.
அவர்கள் சம்பிரதாயபூர்வமாக தமது அரசியல் சித்தாந்தங்களின்படி செயற்பட்டாலோ இல்லாவிடில் இலங்கை சமூகத்தில் நிலவும் குலம்,சாதி என்பவற்றை வைத்து அரசியல் நோக்கில் செயற்பட்டாலோ மூன்றாவது உள்நாட்டுப் போரொன்று வெடிப்பதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏற்க வேண்டும் என்பதை இந்நாட்டு அரசியல் கட்சிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் நாடு வங்குரோத்தான போது, நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தனி உறுப்பினராக அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க, நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றார். 2022 ஜூலை 22 ஆம் திகதி, 08 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டு நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.பின்னர் வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பல மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொருளாதார பரிமாற்றச் சட்டம் அவற்றில் விசேடமானது. அதை ஒதுக்கி எந்த அரசியல் கட்சியும் செயல்பட முடியாது. 2027 இல், நம் நாடு வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்டு 05 ஆண்டுகள் நிறைவடையும்.
பொருளாதார பரிமாற்றச் சட்டத்தின்படி, 2027ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்க வேண்டும். பொருளாதார பரிமாற்றச் சட்டத்தின் மூலம் இதுவரை நாட்டை ஆட்சி செய்த கட்சிகளுக்கு இல்லாதிருந்த ஒரு அம்சமான பொறுப்புக்கூறல் இந்த சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சட்டத்தின்படியே எந்தக் கட்சியும் தனது கொள்கைகளை முன்வைக்க வேண்டும் . மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகம், தொழில்துறை முறைமை, ஆசியா மற்றும் உலகத்துடன் போட்டியிடும் செயல்முறையை உள்ளடக்கிய வேகமான பொருளாதாரத்தை உருவாக்குவதே இந்த புதிய பொருளாதார பரிமாற்றச் சட்டத்தின் நோக்கமாகும்.
இன்னும் சில அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றும் சம்பிரதாய முறையையே பின்பற்றி வருகின்றன. வரவு செலவுத்திட்ட அலுவலகச் சட்டம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டம், அரச கடன் முகாமைத்துவச் சட்டம் போன்ற முக்கியமான சட்டங்களில் உள்ள கொள்கைகளை மீறி தங்கள் கொள்கைகளை பொதுமக்களிடம் முன்வைக்கின்றனர். இதனால் இலங்கையை மீளக் கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்படும். உதாரணமாக, பொருளாதார பரிமாற்றச் சட்டம், வரவுசெலவுத் திட்ட அலுவலகச் சட்டம் மற்றும் அரச கடன் முகாமைத்துவச் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு அப்பால் ஒரு அரசியல் பாத்திரம் இருக்க முடியாது. ஆனால், 225 உறுப்பினர்களும் புதிய பொருளாதார பரிமாற்றச் சட்டத்தை பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் வெளியே வந்து வேறு விடயங்களைக் கூறுவது வருத்தமளிக்கிறது. நாட்டின் நிலைமையை புரிந்துகொண்டு அவ்வாறு செயற்பட வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றேன். சாதி, மத,அரசியல் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் தேசியத் திட்டத்துக்கு இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமது தனிப்பட்ட கொள்கை எதுவாக இருந்தாலும், அதனை அவ்வாறே வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல், நாட்டைக் கட்டியெழுப்பும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு இணங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிலர் ஊழல் குறித்து பொய்யான கருத்துகளை வெளியிடுகின்றனர். ஊழலைக் கட்டுப்படுத்த நீதித்துறையும் பொலிஸாரும் உள்ளனர். ஊழலை குறைக்க அந்த துறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆசியாவிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஊழல் எதிர்ப்புச் சட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் செயற்படுத்தப்பட்டுள்ளது.இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், 06 முதல் 12 அல்லது 15 வருடங்கள் வரை ஒரு தேசிய வேலைத்திட்டத்தின்படி நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனால்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தாம் அதிகாரத்தைப் பெறுவதற்காக பொதுமக்களிடம் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும். இந்த வீழ்ச்சி அடைந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேறு மாற்று வழிகள் இல்லை. அதன்போது, நாட்டை முதன்மைப்படுத்தி அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைவது மிகவும் முக்கியமானது. ஜனநாயக நாட்டில் எந்த அரசியல் கட்சிக்கும் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் உள்ளது. ஆனால் நாட்டை மீண்டும் அவல நிலைக்குத் தள்ளுவதா? இல்லையா? என்பதைத் தெரிவு செய்வதற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
வாக்காளர்கள் வெறுப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லக்கூடாது. இந்தத் தேர்தல் யாரையும் பழிவாங்குவதற்காக நடத்தப்பட்ட தேர்தல் அல்ல. இந்த தேர்தல், வாக்குகளை பயன்படுத்தி நாட்டை தோற்கடிப்பதற்கான சந்தர்ப்பம் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.