முக்கிய செய்தி
பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த சகல அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு…!
- அனைவரும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
- ஏற்றுமதியை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் – ‘டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம்’ 2030 திட்டம் கேகாலையில் இருந்து ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு.
- கேகாலை மாவட்டத்தில் 42 பிரிவெனாக்கள் மற்றும் 62 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்.
- சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு QR குறியீடு அறிமுகம்.
நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் வழிநடத்தும் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றிணையுமாறு சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
நாட்டில் ஏற்றுமதி சார்ந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்பை இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கள் இணைந்து செயற்படுத்தும் “டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் 2030” வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று (26) ரம்புக்கன பராக்கிரம மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்துவதற்காக, தொழில்நுட்ப அமைச்சு “டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் 2030”,திட்டத்தை ஆரம்பித்துள்ளது. உட்கட்டமைப்பு, இணைப்புகள்,பிரவேசம், திறன்கள், கல்வியறிவு,கைத்தொழில் மற்றும் தொழில், இணைய பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் தனியுரிமை, டிஜிட்டல் நிதி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட அடிப்படை தூண்களின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கலை கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆரம்ப கட்டம் கேகாலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதோடு, கேகாலை மாவட்டத்தில் உள்ள 42 பிரிவெனாக்கள் மற்றும் 62 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களும் விநியோகிக்கப்பட்டன.
ரம்புக்கன பராக்கிரம வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி ஒருவர் விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பதுடம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, ஒரு மில்லியனுக்கும் அதிகமான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் கேகாலை மாவட்டத்தில் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்காக பின்னவல மிருகக்காட்சிசாலை வளாகத்தில் இன்று(26) நடைபெற்ற நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பின்னவல கித்துல்கல சுற்றுலா வலய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரம்புக்கனை பிரதேச செயலகப் பிரிவில் 07 புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதன் கீழ், ஹிரிவடுன்ன பாலத்திற்கு அருகாமையில் இருந்து பின்னவல யானைகள் சரணாலயம் வரையிலான பாதையை அபிவிருத்தி செய்தல், பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலையைச் சுற்றி வீதி விளக்குகள் அமைத்தல், பின்னவலவை புராதன சுற்றுலாத்தலமாக மேம்படுத்துதல், தெலிவல கொட்டாவெஹர விகாரையை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்தல், பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு அருகில் இருக்கும் வாகன தரிப்பிடம் மற்றும் உத்தேச வணிக வளாகத்தின் அபிவிருத்தி, பின்னவல மிருகக்காட்சிசாலையின் வாகன தரிப்பிடம் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தல் என்பனவும் இதன் போது அபிவிருத்தி செய்யப்படுகிறது.
பின்னவல மிருகக்காட்சிசாலை வளாகத்தில் உள்ள DIGIECON காட்சிக் கூடத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்ததுடன், QR குறியீடு மூலமான கொடுப்பனவுகளை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.அதன் பின்னர் பின்னவல வாகொல்ல விவசாய பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டிட வளாகத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார்.
தொழில்முனைவோருக்கு SLS சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,
இந்தப் பாடசாலைக்கு இன்று வந்தபோது நான் பாடசாலைக்குச் சென்ற காலம் நினைவுக்கு வந்தது. அப்போது எங்களிடம் கரும்பலகையும் சுண்ணாம்புத் துண்டும் மட்டுமே இருந்தன. அன்று இந்த வசதிகள் இருக்கவில்லை. பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பிறகு தான் முதன்முறையாக கணினியைப் பார்த்தேன். இன்று உங்களிடம் நவீன உபகரணங்களுடன் வசதியான வகுப்பறைகள் உள்ளன. இன்றைய உலகம் அனைத்து அம்சங்களிலும் வேகமாக மாறி வருகிறது. அந்த மாற்றத்தை எதிர்கொள்ள தேவையான அறிவையும் பெற வேண்டும்.
இந்த நாடு வங்குரோத்தடைந்த சமயத்தில் , அந்த வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டு ஒரு நாடாக எப்படி முன்னேறுவது என்று யோசித்தேன். மேலும் நமக்குத் தேவையான அந்நியச் செலாவணியை எப்படித் தேடிக்கொள்வது என்ற கேள்வியும் இருந்தது. புதிய தொழில்நுட்ப அறிவுடன் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு விரைவாக மாற வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இனிமேலாவது அதற்காக பாடுபட வேண்டும்.
அதன்படி, விவசாயம் மற்றும் வணிகத் துறையிலும், பாடசாலைகளிலும் டிஜிட்டல் மயமாக்கலை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்படி பாடசாலைகளிலும் பிரிவெனாக்களிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களுக்கும் இதன் நன்மைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காக எலோன் மாஸ்க்கை இலங்கைக்கு வந்து பணிகளை ஆரம்பிக்குமாறு அழைத்தேன். தற்போது அதற்கு தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப அறிவை முடிந்தவரை கிராமத்திற்கு எடுத்துச் செல்ல எதிர்பார்க்கிறோம். அதைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்து இந்த தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தலாம். நாட்டில் பசுமை, டிஜிட்டல் பொருளாதாரமும் உருவாக்கப்பட வேண்டும். கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் AI தொழில்நுட்பம் குறித்து விவாதம் நடைபெற்றது. அதன்போது ChatGPT இலிருந்து பெற்றுக்கொண்ட விடயங்களையே பலரும் கூறினர். பாராளுமன்றம் இப்போது அத்தகைய நிலையை அடைந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
சில சமயங்களில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத விடயங்களை திரிபுபடுத்திக் கூறலாம். அந்த நிலையை தடுப்பதற்கான சட்ட வரைவை நாம் இப்போது உருவாக்கி வருகிறோம். இந்தப் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வேளையில் இந்தியாவின் ஒத்துழைப்பை பெற தீர்மானித்துள்ளோம். அதேபோல் தொழில்நுட்பத்தை மையப்படுத்திய பல்கலைக்கழகமொன்றை அமைக்கவும் தீர்மானித்துள்ளோம்.
இந்தத் தொழில்நுட்ப அறிவைக் கொண்டு, நாட்டில் புதிய பொருளாதார மாற்றத்தை உருவாக்கி முன்னோக்கிச் செல்ல எதிர்பார்க்கிறோம். அதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்கும் வகையில் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். இது குறித்த விவாதமும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
அது குறித்து பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இறுதியில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுத்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அனைவரும் ஒற்றுமையாக இந்த பயணத்தை செல்வோம்.
இன்று இந்தியா, சீனா போன்ற நாடுகள் வேகமாக டிஜிட்டல் மயமாகி வருகின்றன. அவர்களின் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. நாமும் அந்த நிலையை அடைய வேண்டும். அதற்காக QR குறியீடு முக்கியமானது. இதுபற்றி மக்களுக்கு தெரியப்படுத்தி, அதற்கான தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எனவே இந்த திட்டம் மிகவும் முக்கியமானது.
எதிர்காலத்தில் இந்த நாட்டில் உள்ள அனைருக்கும் இந்தியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளின் பொருளாதாரங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறேன். அதற்கு ரூபாயை வலுப்படுத்த வேண்டும். மேலும், நமது வெளிநாட்டு கையிருப்பையும் அதிகரிக்க வேண்டும்.
அதற்கான பணிகளை தற்போது செய்து வருகிறோம். நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் பட்சத்தில் நமது அந்நியச் செலாவணி அதிகரிக்கும். இத்தகைய அந்நியச் செலாவணி கையிருப்பின் மூலம் அந்த நாடுகளுடன் எந்தச் சிக்கலும் இல்லாமல் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த 10 வருடங்களில் இந்த நாட்டில் நவீன பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என நம்புகின்றோம். இது கொழும்பில் மட்டுமின்றி கிராமப்புறங்களுக்கும் கொண்டுச் செல்லப்படும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் சட்டத்தரணி நவீன் திஸாநாயக்க,
ரம்புக்கன பராக்கிரம மகா வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி ஒருவர் விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். ஓகஸ்ட் 02 ஆம் திகதி முதல் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 1000 பிள்ளைகளுக்கு கணனி பாடநெறியை கற்க வாய்ப்பு வழங்கப்படும். இதற்காக சப்ரகமுவ மாகாண சபை 50 மில்லியன் ரூபாவை செலவிடுகிறது. மேலும், 850 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வியை வழங்க பிரிட்டிஷ் கவுன்ஸில் முன்வந்துள்ளது.
அதற்காக 50 மில்லியன் ரூபா வழங்கப்படும். பிரிவெனாக்களுக்கு தேவையான உபகரணங்களைப் பெறுவதற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். இப்பாடசாலை கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. இவற்றினால் கல்வி வலுப்பெறுவதுடன், அறிவு நிறைந்த சமுதாயம் கட்டமைக்கப்படும்” என்றார்.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,
முதலில் ஜனாதிபதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று அவருக்கு நல்ல நாள். ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நாட்டிற்கு டிஜிட்டல்மயமாக்கலை விரைவாக அறிமுகப்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது. அதற்காகவே “டிஜிட்டல் பொருளாதாரம் 2030” திட்டம் முன்மொழியப்பட்டது. அந்தத் திட்டத்தின்படி டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் தொழில் சந்தையை உருவாக்குவதற்கான முன்னெடுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகருக்கு வெளியில் உள்ள ஆயிரம் பாடசாலைகளைத் தெரிவுசெய்து, கணினி அறிவை வழங்கும் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. பிரிவெனா கல்விக்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 440 பிரிவெனாக்களுக்கான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தூரக் கிராமங்களுக்கு நவீன வகுப்பறைகளை வழங்குவதன் மூலம், தொழில்நுட்ப அறிவு நிறைந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி கல்வியை நவீனமயமாக்கும் பணிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் உலகத்து சரி சமமாக போட்டியிடக்கூடிய இளம் தலைமுறையை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
கேகாலை மாவட்ட சாசன பாதுகாப்புச் சபைத் தலைவர் ஹெம்மாதகம ஸ்ரீ சித்தார்த்த நாயக்க தேரர், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்ற உறுப்பினர் சுதத் மஞ்சுள, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க பிரேமதாச, சந்தீப் சமரசிங்க மற்றும் பராக்கிரம வித்தியாலய அதிபர் ஜயம்பதி பண்டார, பாடசாலையின் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.