உள்நாட்டு செய்தி
ஊழல் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்….!
- ஊழல் ஒழிப்பு சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும்.
- 2025-2029 வரை தேசிய ஊழல் ஒழிப்பு திட்டம்.
- கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்கள் மேலும் அதிகரிப்பு.
- இலஞ்ச ஊழல் முறைபாடுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் அதிகாரங்களும் அதிகரிப்பு.
- அரச பெறுகையின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்- ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிக அரச பெறுகைத் தகவல்கள் வெளியிடப்படும்.
- வரிச்சலுகை பெறும் அனைத்து நிறுவனங்களினதும் பெயர்கள் வெளியிடப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக கண்காணிப்பின் தொழில்நுட்ப உதவி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான சட்ட, கட்டமைப்பு ரீதியான மற்றும் படிமுறை வரைவிற்கு அமைவாக “தேசிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை” செயற்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சர் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஊழலுக்கு எதிரான தேசிய நிகழ்ச்சி நிரல், 2023 இல் நிறைவேற்றப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், அதற்கான செயல்திட்டத்தைத் தயாரித்தல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செயல்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் செயல் திட்டத்திற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் இந்த யோசனைக்குள் உள்ளடங்கியுள்ளது.
2025-2029 காலப்பகுதிக்காக தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டத்தை உருவாக்குதல், கணக்காய்வாளர் நாயகத்தின் சட்ட அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துதல், 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட விடயங்களும் இந்த நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.
சிக்கலான கணக்காய்வுகளின் போது முழுமையான அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அதன் ஊடாக வெளிப்படுத்தப்படும் ஊழல், மோசடி தொடர்பிலான குற்றவியல் விசாரணைக்காக, சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுடன் அடிப்படை தகவல்களை கணக்காய்வாளர் நாயகத்துடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் வகையில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய சரியான பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிய தலைமைக் கணக்கியல் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளிடமிருந்து அது தொடர்பான கூடுதல் கட்டணத்தை அறவிடுவதற்கான அதிகாரத்தை கணக்காய்வாளருக்கு வழங்குவதற்கான பரிந்துரைகளும் தேசிய நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு பயனுள்ள மற்றும் வெளிப்படையான சொத்து விபரத்தை வெளிப்படுத்தல் மற்றும் இணக்கப்பாட்டுக்கான நிறுவன கட்டமைப்பு தொடர்பிலான முன்மொழிவுகளும் தேசிய நிகழ்ச்சி நிரலில் உள்ளட்டக்கப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்பான திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முரண்பாடுகள் தொடர்பிலான விதிமுறைகள், அவற்றை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல் மற்றும் அவ்வாறு செய்யத் தவறியது. அதிகாரிகளின் தண்டனை உள்ளிட்ட விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்திற்கு அமைவாக சிரேஷ்ட பிரஜைகளுக்காக இந்த சொத்து விவரங்கள் வெளியிடுவதற்கான இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு இந்த வேலைத்திட்டத்தினை ஆறு மாதங்கள் அல்லது வருடத்திற்கு ஒரு முறை மீளாய்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றம் மற்றும் பணமோசடி மூலம் பெறப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான தேசிய படிமுறைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரங்களின் பிரகாரம், முறையான செயற்பாட்டிற்கு தேவையான ஆதரவை வழங்குதல் மற்றும் புதிய விசாரணைகள் மூலம் முறையான வழக்குத் தொடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல், அரசியல் ரீதியாக அடையாளப்படுத்தப்படும் நபர்களை (Politically Exposed Persons) அடையாளம் காண்பது போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த தேசிய நிகழ்ச்சி நிரல் ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குகளை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இது ஒரு நிறுவனத்தின் உரிமையைப் பற்றிய தகவல்களை பெற்றுகொள்வதற்கான உதவிகளை வழங்குவதற்கான நியதிகளை உருவாக்குவதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த பொதுப் பயன்பாட்டிற்கான பதிவேடு ஒன்றை உருவாக்கவும் வழிவகுக்கும்.
அரச பெறுகைச் செயற்பாடுகளின் போது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, சர்வதேச தரத்திற்கு ஏற்ப அரச பெறுகை சட்டத்தை (Public Procurement Law) அமுல்படுத்தவும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான பெறுகை ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை வெளியிடுவது தொடர்பிலும் ஊழல் தடுப்பு நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளது.
வரி விலக்கு செய்யப்பட்ட நிறுவனங்களின் பெயர்களை பிரசித்தப்படுத்தல்,முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் முன்மொழிவுகளை மதிப்பிடுவதற்கான சரியான செயல்முறை உருவாக்கப்படும் வரை, மூலோபாய மேம்பாட்டுத் திட்டச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துதல், பயிற்சி பெற்ற மற்றும் சுயாதீனமான பணியாளர்களை கொண்டிருக்கும் வகையில் அரச நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்தல், வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களுக்குள் தற்காலிகமாக ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்ட சாத்தியமான செயற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் நேரடி நிர்வாகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சேமலாப நிதியத்திற்காக புதிய முகாமைத்துவக் கட்டமைப்பை நிறுவுதல், நிறைவேற்று மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் முறையை மேம்படுத்துவதன் மூலம் அரச உரித்துள்ள வங்கிகளுக்கிடையில் கூட்டுதாபன நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல், நீதிச் சேவை ஆணைக்குழுவை பலப்படுத்தல் உள்ளிட்ட முன்மொழிவுகளும் இதற்குள் அடங்கியுள்ளன.
தேசிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல், தகவல் அறியும் உரிமையை வலுப்படுத்துவது தொடர்பான நியதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும், 2024 மே 29 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வின் முன்னேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, நாட்டில் முழுமையாக ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தையும் இந்த நிகழ்ச்சி நிரல் முன்மொழிந்துள்ளது.
இலஞ்ச, ஊழல் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு, அரச வருமான நிர்வாகம், அரச நிதி முகாமைத்துவம்,அரச சொத்து கண்காணிப்பு மற்றும் நிர்வாகம், பணத்தூய்தாக்கலை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுத்தல் உள்ளிட்ட விடயங்களும் இதில் உள்ளடங்கியுள்ளன.