Connect with us

முக்கிய செய்தி

துறைமுக பிரவேசத்துக்கான அதிவேக வீதி, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் வலுவாக அமையும் -சாகல ரத்நாயக்க-

Published

on

நிலையான பொருளாதார முறைமையின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான அநேக சட்டத் திருத்தங்கள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

ஆட்சி மாறும் போது கொள்கைகள் மாற்றம் அடைவது நாட்டின் பெரும் பிரச்சினையாகியுள்ளது. எனவே அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நிதி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் சட்ட ரீதியான மறுசீரமைப்புக்களை அரசாங்கம் தற்போதும் மேற்கொண்டுள்ளதென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மத்திய வங்கிச் சட்டம், அரச நிதிச் சட்டம், கடன் முகாமைத்துவச் சட்டம் என்பன தற்போதும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பொருளாதார பரிமாற்றச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் இன்று (24) நடைபெற்ற அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பிலான தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துறைமுக பிரவேசத்துக்கான அதிவேக வீதிக் கட்டமைப்பின் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும், அதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய வலு கிட்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்னாயக்க,

“இந்த வேலைத்திட்டம் மிக முக்கியமானது .இதனை ஆரம்பிப்பதற்கு முன்பாக பல சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. துறைமுகத்தின் தலைமையகத்தையும் இந்த வேலைத்திட்டத்தை கருத்தில் கொண்டு மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இத்திட்டத்திற்கு போதியளவு இடம் கிடைக்காமையே அதற்கு காரணமாகும். எவ்வாறாயினும் துறைமுக பணிகளுக்கு இடையூறு இன்றி அவற்றை செய்து முடித்திருக்கிறோம். 2019 இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

2020 கொவிட் பரவலுக்கு மத்தியிலும் இந்த பணிகள் இடம்பெற்ற நிலையில் பொருளாதார சரிவின் காரணமாக அவற்றை இடைநிறுத்த வேண்டிய நிலை உருவானது. தாமதமாகியேனும் தற்போது இந்த திட்டத்தை நிறைவு செய்ய முடிந்திருக்கிறது. இது பொருளாதாரத்திற்கு பெருமளவில் வலு சேர்க்கும்.

அதன்படி 3 தசாப்தங்களுக்கு முன்பாக திட்டமிடப்பட்ட அதிவேக வீதிக் கட்டமைப்பு இப்போது கிடைத்திருக்கிறது. கொழும்பு நகரின் செயற்பாடுகளை இடையூறு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கும், கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இடையில் காணப்படும் வாகன நெரிசலை மட்டுப்படுத்துவதற்காகவும் இந்த அதிவேக வீதி அமைந்திருப்பதோடு, நாட்டின் அதிவேக வீதிக் கட்டமைப்புக்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாகவும் அமையும்.

வாகன நெருக்கடியால் விநியோகச் சேவைகள் தாமதமடைவதோடு அதனால் நிதி வீண் விரயமாகும். அதனால் அதிவேக வீதிக் கட்டமைப்பு இந்த விரயத்தை குறைக்க உதவும். கொழும்பு நகரின் அபிவிருத்திச் செயற்பாடுகள் எதிர்கால அபிவிருத்திக்கான தேவைகளை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருக்காமையும் பிரச்சினையாக காணப்படுகிறது.

மலேசியா – சிங்கப்பூர் போன்ற நாடுகள் வீதிகளை விஸ்தரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளன. ஆனால் கொழும்பில் அதனை செய்ய முடியாதுள்ளது. காலத்துக்கு காலம் கொள்கைகள் மாற்றப்பட்டதால் தேவையான காணிகளை தக்கவைத்துக்கொள்ள முடியாது போயுள்ளது. அதனால் கொழும்பு நகரம் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கிறது.

அதிவேக வீதிகளுக்கு மாறாக தற்போதுள்ள ரயில் வீதிகளை மேம்படுத்தல், தூண்கள் மீதான புதிய புகையிரத வீதிகளை அமைத்தல், சுரங்க ரயில் பாதைகளை அமைத்தல் போன்ற செயற்பாடுகளும் நெரிசல்களை தவிர்க்க உதவியாக அமையும்.

செலவுகளை பார்க்கும் போது தற்போதுள்ள ரயில் செயற்பாடுகளை மேம்படுத்துவதையே குறைந்த செலவில் செய்ய முடியும். அதுபற்றிய நிபுணத்துவ ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. புதிய முறைகளை செயற்படுத்தினால் அதற்கான செலவுகளை கட்டணச் சீட்டுக்கள் வாயிலாகவே பெற வேண்டியிருக்கும். அந்தளவு தொகையை செலுத்த நாட்டு மக்களின் வருமானம் போதுமானதாக இல்லை. எனவே புதிய முறைகளுக்குச் செய்ய நீண்ட காலம் தேவைப்படும் என்பதோடு புதிய முறைகள் குறித்து தேடிப்பார்க்க வேண்டியதும் அவசியமாகும்.

ஹொங்கொங் நாட்டில் தனியாருக்கு அரசாங்கத்தின் ரயில் நிலைய காணிகளை வழங்கி சுரங்க பாதையை மேம்படுத்தும் திட்டம் செயற்படுத்தப்பட்டது. அது போன்று நமது நாட்டுக்கு பொறுத்தமான முறையொன்றை நாம் செயற்படுத்த வேண்டியது அவசியம்.

ஜப்பானின் உதவியில் இலகு ரயில் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். ஆட்சி மாற்றத்தோடு அந்தச் செயற்பாடுகள் தடைப்பட்டன. அரசாங்கம் மாறும் போது கொள்கைகள் மாற்றம் பெறுவதும் இந்நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையாகும். அந்த விடயங்களுக்கு தீர்வை எட்டும் நோக்கிலேயே மத்திய வங்கிச் சட்டம், அரச நிதி நிர்வாகச் சட்டம், பொருளாதார பரிமாற்றச் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.

அதேபோல் முதலீடுகள் வரும்போது வௌிப்படைத் தன்மையுடன் செயற்படுதல் மற்றும் விரைவாக தீர்மானங்களை எடுத்தல் உள்ளிட்டச் செயற்பாடுகள் ஊடாக படிப்படியாக நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையான வாழ்வாதார சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டத்து அந்த பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். பொருளாதார அபிவிருத்திக்கு வீதிக் கட்டமைப்புக்களின் முன்னேற்றமும் மிக முக்கியமானதாகும்.

அதற்காக இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்தி வருவதோடு, தரைமார்க்க தொடர்புகளை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புடன் செயலாற்றுகிறோம். அதற்காக 50 கிலோ மீற்றர் தூரத்துக்கு பாலத்தை அமைக்க வேண்டியிருக்கும். அதனால் புதிய வகையில் பாலம் அமைக்கும் தொழில்நுட்ப அறிவு கிடைப்பதோடு. நமது எதிர்கால பொறியிலாளர்களுக்கு நிர்மாணிப்பு தொடர்பிலான தெரிவுகளை பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும்.

அதனால் நாடு வளர்ச்சி அடையும். இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதிச் செயற்பாடுகளை இலங்கை துறைமுகத்தின் மூலம் செய்யவதற்கான வாய்ப்பு உருவாகும். அந்நாட்டின் விநியோகச் செலவு 50 சதவீதத்தினால் குறைவடையும். துறைமுகச் செயற்பாடுகளுக்கான வசதிகள் ஏற்படும். ஆனால் இவை சாத்தியமாவதற்கு நிலையான கொள்கைகளுடன் செயற்பட வேண்டியது மிக அவசியமாகும்.” என்றும் தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன,

“தற்போதைய ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க 2019 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியுள்ளார். இலங்கையின் வீதி அபிவிருத்தி வரலாற்றை மாற்றியமைக்கும் வகையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் இத் தூண்களின் மேல் நிர்மாணிக்கப்படும் துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து கடன் வசதிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும் இத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட கடன் உதவிகள் தொடர்ந்தும் பெறப்பட்டது. எனவே, இந்த திட்டம் வெற்றிகரமாக இறுதி கட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொருளாதார பரிமாற்ற சட்டமூலம் வியாழனன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இலங்கையின் வரலாற்றில் எந்த சமயத்திலும் இந்த சட்ட மூலத்தின் மூலம் குறிப்பிடப்பட்ட செயல்திறன் இலக்குகள் சட்டமாக்கப்படவில்லை. ஆனால், அது சட்டமாக மாறிய பிறகு, நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும், எந்த வழியிலும் இந்த இலக்குகளுக்குச் செல்ல வேண்டும். எனவே, 2048 ஆம் ஆண்டளவில் தனிநபர் வருமானத்தை 20,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் வகையில் பொருளாதார தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியத் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளார். எதிர்காலத்தில் இதனை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறைமுக பிரவேச அதிவேக நெடுஞ்சாலையானது, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிற்கு பெரும் பங்களிப்பை வழங்கும். இது நேரடி அந்நிய முதலீட்டுக்கு இடமளிக்கும்.”எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பிரதிநிதி தகாபுமி கடனோ, சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் லியு வெய்மின் உட்பட அமைச்சின் செயலாளர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.