Connect with us

முக்கிய செய்தி

நதீரா மடுகல்ல எழுதிய “பார்லிமேந்துவே பலஹத்காரய” நூல் வெளியிடப்பட்டது…!

Published

on

பாராளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்தும் பார்லிமேந்துவே பலஹத்காரய (பாராளுமன்றத்தின் பலவந்தம்) நூலின் ஊடாக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

  • பிரதமர் தினேஷ் குணவர்தன

நதீரா மடுகல்ல எழுதிய பார்லிமேந்துவே பலஹத்காரய (“பாராளுமன்றத்தின் பலவந்தம் – பொலிஸ் அழைக்கப்பட்டு அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்”) என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

நதீரா மடுகல்ல தனது 20 வருட அனுபவத்தினாலும், திரட்டிய அறிவினாலும் வாசகர் உலகிற்கு கொண்டு வரும் “பாராளுமன்றத்தின் பலவந்தம்” நூலானது பாராளுமன்ற வரலாற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியாகும்.

இந்நூலின் ஊடாக இலங்கைப் பாராளுமன்றத்தில் ஊடகங்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் தென்படாத உண்மைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த ஊடகங்களின் வாயிலாக முயற்சித்துள்ள நூலாசிரியர் இந்நூலின் ஊடாக மேலும் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்துள்ளார்.

நதீரா மடுகல்ல களனிப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை தொடர்பான பட்டம் பெற்றுள்ளார். எழுத்து மற்றும் வெகுஜனத்துறை தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பெற்றுள்ள அவர் வானொலி,தொலைக்காட்சி, மற்றும் பத்திரிகை துறையில் பிரபல ஊடகவியலாளராவார். அவர் தற்போது ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

இந்நூலின் முதற் பிரதி நதீரா மடுகல்லவினால் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வழங்கி வைக்கப்பட்டு பின்னர் அமைச்சர்கள் தலைமையிலான முக்கியஸ்தர்களுக்கும் பெற்றோருக்கும் நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன. நூல் வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் பிரதான உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற பாரம்பரியம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்து ‘பாராளுமன்றத்தின் பலவந்தம்’ நூல் சுவாரஸ்யமாக மக்களை சென்றடையும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்நூலின் ஊடாக பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் நல்லதொரு கருத்தை சமூகத்திற்கு வழங்குவதற்கு எழுத்தாளர் நதீரா மடுகல்ல முயற்சித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்ததாவது:

நதீரா மடுகல்லவின் “பாராளுமன்றத்தின் பலவந்தம்” வெளியீட்டு நிகழ்விற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி. இது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் ஆக்கப்பூர்வமான வெளியீடாகும். இலக்கியம் , மொழிகள் மற்றும் கலைகளால் இலக்கியம் வளர்க்கப்படுகிறது. நதீரா மடுகல்ல வௌியிட்டிருக்கும் இந்தப் படைப்பு இலக்கியத்தை மேலும் செழுமைப்படுத்தும் படைப்பாகவே நான் பார்க்கிறேன். இவரது மொழி கையாளுதல் மற்றும் ஆக்கப்பூர்வமான முன்வைப்பு காரணமாக இலங்கை பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் மக்களிடம் அழகாக முன்வைக்கப்பட்டுள்ளன. அவரது இந்த முதல் புத்தகத்தின் மூலம், பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய விளக்கத்தை சமூகத்திற்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனாலேயே இலங்கை பாராளுமன்றத்தில் நடந்த பல நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பாராளுமன்றத்தின் பன்முகத்தன்மை காரணமாக, இலங்கையின் இலக்கியத்துறை மேலும் போசிக்கப்பட்டுள்ளது. அதனால் எழும் சுவாரசியமான விடயங்களிலும் இந்நூல் இணைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற மரபைப் பாதுகாத்து ஜனநாயக பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்நூல் சிறந்த உதாரணம். பாராளுமன்றத்தின் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக ஆசிரியர் நதீரா மடுகல்லவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன:

பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். இலங்கையிலும் உலகிலும் பாராளுமன்றத்தை சமூகம் தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இறையாண்மை அதிகாரத்தால், குடிமகன் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்றத்திற்கு ஒரு பிரதிநிதியை நியமிக்கிறார்.இந்தப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் செயல்படும் விதம் மாறலாம். உதாரணமாக விஜயானந்த தஹநாயக்க பாராளுமன்றத்திற்கு துண்டொன்றை கட்டிக் கொண்டு பாராளுமன்றத்திற்கு வந்தார். சபாநாயகரின் அறிவிப்புக்கு செவிசாய்க்காததால் சிலரைப் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நூலில் ‘பலவந்தம்’ என்ற வார்த்தையைப் பல்வேறு விதத்திலும் பயன்படுத்த முடியும். 88-89 காலகட்டத்தின் பலவந்தம் பற்றி சமூகம் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளது. உயிர்களை பறிக்கும் மட்டத்திற்கு பலவந்தம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பாராளுமன்றத்தின் பலவந்தம் என்பது ஜனநாயகத்துடன் தொடர்புபட்டது என்றே கூற வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்:

வெகுசன ஊடகங்கள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் ஆகியவற்றில் விசேட ஆர்வம் கொண்டவர் என்ற வகையில், இங்கு உரையையாற்ற முடிந்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான விடயங்கள் இந்நாட்டில் நடந்தவை.

இந்தக் கதவு வழியாகத்தான் அனைத்து உறுப்பினர்களும் பலவந்தமாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அரசியலில் இருந்த நல்லெண்ணம் கொண்ட அரசியல்வாதிகள் பற்றியும் இந்நூல் குறிப்பிடுகிறது. அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாட்டுக்காக சிறந்த பணிகளை செய்திருக்கிறார்கள்.

சபாநாயகருக்குக் கீழ்ப்படியாமல், தொடர்ந்து உரையாற்றினால் அவைக்கு வெளியே அனுப்புவது பலவந்தம் எனப்படும். சோமவீர சந்திரசிறி, ரொபர்ட் குணவர்தன, விஜயானந்த தஹநாயக்க போன்றவர்கள் பற்றி இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எப்படி எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதையும் இந்த நூல் தெளிவாகக் குறிப்பிடுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேற்றப்படுவதற்குக் காரணமான சட்டமூலங்களை நாம் ஆராய்ந்தால், அந்த சட்டங்கள் நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய சட்டங்களாகவே உ்ளளன.

1956 ஆம் ஆண்டு சிங்கள மொழியை அரச கரும மொழியாக்கும் சட்டம், தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கும் சட்டம், போன்ற நாட்டிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களின்போது இந்த பலவந்தம் இடம்பெற்றன. எனவே, இந்நூல் இச்சட்டங்களைப் பற்றி ஆராயும் ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நூலைப் படித்த பிறகு, சம்பந்தப்பட்ட சட்டங்கள் தொடர்பான ஹன்சார்ட் அறிக்கைகளைப் படிக்க வாசகருக்கு ஆர்வம் ஏற்படும்.

விகிதாச்சாரத் தேர்தல் முறையில் வாக்கு கேட்பவருக்குத்தான் பிரச்சினை இருக்குமே தவிர, வாக்களிப்பவருக்கு அல்ல. இலங்கை போன்ற ஒரு நாட்டுக்கு விகிதாசார தேர்தல் முறை தேவை என்று நான் நினைக்கிறேன்.ஒரு நாட்டில் பிரதிநிதித்துவ ஜனநாயகம், முறையான ஜனநாயகம் மற்றும் சமூக ஜனநாயகம் ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்.ஜனநாயகத்தின் தரத்தை உயர்த்த டிஜிட்டல் ஊடகங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பௌதிக இருப்பு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், டிஜிட்டல் இருப்பு இல்லாமல் ஜனநாயகம் முன்னேற முடியாது. இந்நூலில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயகத்தின் ஆர்வம் எதிர்காலத்தில் சமூக விளக்கமாக மாறும்.

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நதீரா மடுகல்ல:

இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் பிரஜை என்ற ரீதியில் ஒரு கடமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அதுதான் அவர்களின் நாட்டைப் பாதுகாப்பது. அந்தக் கடமையை பிரஜை நிறைவேற்றாவிட்டால், நம் தாய்நாடு பாதுகாப்பற்றதாகிவிடும். இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால் நெருக்கமும் ஒழுக்கமும் மிக முக்கியம்.

உலகின் பல்வேறு நாடுகளில் அரசியலைப் பற்றி வெவ்வேறு முறைகள், கருத்துகள், எண்ணக்கருக்கள் மற்றும் அணுகுமுறைகள் உள்ளன. இவற்றில் ஜனநாயகம் என்பது மிக முக்கியமான எண்ணக்கரு. எந்தவொரு நாடும் தனது குடிமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க, அதில் ஜனநாயகம் இருக்க வேண்டும், அதை மக்கள் உணர வேண்டும். ஆனால் அந்த ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது பாராளுமன்றம் மட்டும் அல்ல. அங்கு குடிமக்களாகிய உங்களுக்கும் எனக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. நான் பிரஜை என்ற கடமையையே செய்கிறேன்.

இந்த நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது எனது கடமையாகக் கருதி ‘பாராளுமன்றத்தின் பலவந்தம்’ என்ற தலைப்பில் எனது முதல் புத்தகத்தை வெளியிடுகிறேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் செயற்பட்ட அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி இந்தப் படைப்பு ஆய்வு நூலாக வெளியிடப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமநாத் சி. தொலவத்த, எரான் விக்கிரமரத்ன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.