முக்கிய செய்தி
பாராளுமன்றம் எதிர்வரும் 23 முதல் 26ஆம் திகதி வரை கூடும் !
அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதற்கு சபாநயாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (18) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடவிருப்பதுடன், ஜூலை 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தம்) (இரண்டாவது மதிப்பீடு) சட்டமூலம் மற்றும் நீதித்துறைச் சட்டமூலத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்தம் இடம்பெறவுள்ளது.
ஜூலை 24ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.3 மணி முதல் பி.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 10.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேவால் கொண்டுவரப்படும் “தேசிய பாதுகாப்பு, அனைத்து மதங்கள் மற்றும் நாட்டின் கலாசாரம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்துகாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 25ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 வரை அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.
குறித்த விவாதத்துக்கு மேலதிக நேரத்தை வழங்கும் முகமாக அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரத்தை ஒதுக்காதிருக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காகவும் நேரத்தை ஒதுக்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அலவி, எம்.என். அப்துல் மஜீத், பாலித தெவரப்பெரும மற்றும் மில்ரோய் பெர்னாந்து ஆகியோர் தொடர்பான அனுபதாபப் பிரேரணைகளுக்காக மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான நேரத்தை ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.