முக்கிய செய்தி
“ரன்தொர” உறுமய முழு உரிமையுள்ள வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நடைபெற்றது…!
மேல்மாகாணத்தை சுமார் 50 இலட்சம் மக்கள் வாழும் பெரு நகரமாக மாற்ற திட்டம்
கிராமம், நகரம் மற்றும் மலையகத்தை உள்ளடக்கிய வகையில் மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி மற்றும் வீட்டு உரிமைகள் வழங்கப்படும்
- ஜனாதிபதி
மேல் மாகாணத்தை சுமார் 50 இலட்சம் மக்கள் வாழும் பெரிய நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கிராமங்கள், நகரங்கள் மற்றும் மலையகத்தை உள்ளடக்கிய வகையில் மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குவதற்கு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எந்தவொரு அரசாங்கத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படாத இந்த புரட்சிகரமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று (17) பிற்பகல் நடைபெற்ற கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 50,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் “ரன்தொர உறுமய” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, 2024 வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் பேருக்கு காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டமும், கொழும்பு.அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இரண்டரை இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் முழு உரிமையை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் முதற்கட்டமாக கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 50,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு முழு உரிமையுள்ள உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 937 வீடுகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 180 வீடுகளும் உள்ளடங்கலாக 1117 உறுதிப் பத்திரங்கள் இன்று வழங்கப்பட்டன.
இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மிஹிந்து செத்புர, சிறிசர உயன, மெட்ரோ வீட்டுத் தொகுதிகள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 31 அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு இந்த “ரன்தொர உறுமய” உரிமைப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
உங்களின் பிரச்சினைகளில் ஒன்று இன்று தீர்ந்துவிட்டது. உங்கள் வீட்டின் உரிமை உங்களுக்கு கிடைத்துள்ளது. ஒரு வீட்டின் உரிமையை இழப்பது மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை என்பதை நாம் அறிவோம். கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அந்த மக்களின் பிரச்சினைகளை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேன்.
நாங்கள் மிகவும் இக்கட்டான காலக்கட்டத்தில் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றோம். கடந்த பொருளாதார நெருக்கடியால் இந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் செயற்படும் என்று நீங்கள் நம்பினீர்கள். அந்த நம்பிக்கையின் காரணமாகவே அந்தப் பணியில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து பொறுமையாக செயற்பட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இன்று நாடு பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது. இந்த அரசாங்கம் ஒரு கட்சியால் கட்டியெழுப்பப்பட்டது அல்ல. சிலர் பொறுப்புகளை புறக்கணித்த போது, ஒவ்வொரு கட்சியிலிருந்தும் நபர்களை மிகத் திடீரென திரட்டி இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன் இந்த நாட்டில் இப்படியொரு அரசாங்கம் இருக்கவில்லை.
இன்று நாம் ஒரு நாடாகக் கட்டியெழுப்புகின்ற இவ்வேளையில் சாதாரண மக்களுக்கும் இதன் பயன்கள் சென்றடைய வேண்டும். அதனால்தான் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் முழு உரிமையையும் உங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். நாம் இப்போது ஒரு நாடாக முன்னோக்கி செல்கினறோம். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் இன்னும் முன்னேற வேண்டும். மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரம் இருக்க வேண்டும்.
எந்த அரசாங்கமும் செய்யாத பணியை இந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. சாதாரணமக்களுக்கு நாம் உரிமையை வழங்கியுள்ளோம். இந்த நாட்டின் உரிமையை விரிவுபடுத்தியுள்ளோம். மற்ற அரசாங்கங்கள் பங்குச் சந்தையில் மட்டுமே உரிமையைப் பார்த்தன.
எத்தனை பேர் பங்குகளை வாங்கினார்கள், பங்குகளின் பெறுமதி கூடுகிறதா அல்லது குறைந்ததா என்று பார்த்தார்கள். ஆனால் நாங்கள் சாதாரண மக்களைப் பார்த்தோம்.
இந்த நாட்டின் விவசாயிகள் கடந்த காலங்களில் நல்ல விளைச்சலை எமக்கு வழங்கியுள்ளனர். இல்லையேல் இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள முடியாது. எனவே, அவர்களின் நில உரிமையை உறுதி செய்ய வேண்டும். அந்த மக்களுக்கு இதுவரை நாம் காணி உரிமை வழங்கவில்லை.
இதுவரை உரிமம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இப்போது நில உரிமை கொடுக்க ஆரம்பித்துள்ளோம். இந்த காலக்கெடு முடிவதற்குள் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு காணி உரிமையும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு அந்த வீட்டு உரிமையும் வழங்கப்படும். அப்போது இந்த நாட்டில் காணி, வீட்டு உரிமை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாம் செய்த புரட்சியை எந்த அரசாலும் செய்ய முடியவில்லை என்றே கூற வேண்டும். இந்நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன் பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இது குறித்து கலந்துரையாடினேன். புதிய சட்டம் தயாரித்து அனைவருடனும் கலந்தாலோசித்து பணிகளை மேற்கொள்ளுமாறு நான் பணிப்புரை விடுத்தேன்.
கிராமம், நகரம் மற்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் வீட்டு மற்றும் காணி உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றோம். அது இந்த அரசாங்கத்தின் முக்கிய வேலைத்திட்டம் என்பதைக் கூற வேண்டும். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை அங்கிருந்து ஆரம்பிப்போம்.
இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு முன்னாள் தலைவர்கள் மூன்று பேர் பெரும் தியாகம் செய்தனர். பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல பம்பலப்பிட்டியில் முதலாவது அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணித்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொழும்பில் பாரிய அடுக்குமாடி திட்டங்களை செயற்படுத்தினார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ஷ அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பணியாற்றினார். அதற்காக இந்த மூவருக்கும் நன்றி கூற வேண்டும். இன்று உங்களுக்கு வழங்கப்படும் வீட்டு உறுதிப் பத்திரங்களின் மதிப்பு பத்து வருடங்களில் இரட்டிப்பாகும். எனவே, இந்தச் சொத்தை முறையாக நிர்வகித்து உங்கள் வாழ்க்கையை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்று கிடைத்த பத்திரத்தை அடகு வைக்காதீர்கள். 10 வருடங்களில் கொழும்பு அபிவிருத்தி அடையும். மேல்மாகாணத்தை 50 இலட்சம் மக்கள் வாழும் பெரிய நகரமாக மாற்ற நாம் எதிர்பார்த்துள்ளோம். அப்போது, அரசாங்கம் அந்த இடங்களில் உள்ள பழைய கட்டடங்கள் அகற்றப்படும். மேலும், இந்த மாகாணத்தில் புதிய துறைமுகம் ஒன்றை அமைக்க முடியும்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் உள்ளிட்ட குழுவினர் ஏற்கனவே அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். அத்துடன், கொலன்னாவ பிரதேசத்தில் சில புதிய பாடசாலைகளை அமைக்க தீர்மானித்தோம். அந்தத் வேலைத்திட்டத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளோம்.
பிரதமர் தினேஷ் குணவர்தன
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் இன்று மக்களுக்கான காணி மற்றும் வீட்டு உரிமைகள் வழங்கப்படுகின்றன. இன்று நீங்கள் ஒரு பெருமைக்குரிய உரிமையாளராகிவிடுவீர்கள். உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவைகள். அதன்படி இன்று உங்கள் வீடு உங்களுடையதாக இருப்பதால் அடிப்படை தேவை ஒன்று பூர்த்தியாகின்றது. இது உங்கள் வாழ்க்கையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். அதனை முறையாக நிர்வகித்து வாழ்க்கையை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கொழும்பு நகரின் சகல பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்யும் நகர அபிவிருத்தி அமைச்சரின் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது. கொழும்பு நகர அடுக்குமாடித் திட்டத்தின் ஊடாக பெருமளவிலான மக்கள் இன்று வீடுகளை வைத்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க அதற்காக முதன்மையாக உழைத்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒஃப் எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, இராஜாங்க அமைச்சர்களான தேனுக விதானகமகே, அருந்திக பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, ஏ.எச்.எம்.பௌசி, யதாமினி குணவர்தன, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலவத்த, ஓய்வுபெற்ற மேஜர் பிரதீப் உந்துகொட, சட்டத்தரணி மதுர விதானகே, தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.