உள்நாட்டு செய்தி
மலையக அரச பாடசாலைகளுக்கு காணி உரிமம் வழங்கப்படவில்லை!
மலையக மக்கள் வாழும் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் அந்த காணிகளின் உரிமைகள் பாடசாலைகளுக்கு கையளிக்கப்படாமையால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலு குமார், தற்போதைய அரசாங்கத்தின் கல்வி அமைச்சராக இருக்கும் சுசில் பிரேமஜயந்தவிடம், மலையக சமூகத்திற்கும் அவர்களின் கல்விப் பிரச்சினைகளுக்கும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என? கேள்வி எழுப்பியுள்ளார்.
“1970களில் பெருந்தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் எடுத்தது. ஆனால் பெருந்தோட்ட பகுதியில் உள்ள அரச பாடசாலைகளுக்கான காணி உரித்துகள் இதுவரை கையளிக்கப்படவில்லை. அதற்கு கல்வி அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இன்று, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகங்கள் தமது பாடசாலை காணியை பாதுகாப்பதற்காக காடையர்கள், கசிப்பு வியாபாரிகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் முட்டி, மோத வேண்டிய நிலைமையை எதிர்கொள்கின்றனர். பல அதிபர்கள் பொலிஸ் நிலையங்களில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.”
கல்வி கற்று அதிக சம்பளத்தைப் பெறும் நோக்குடன்ற கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு மலையக மக்கள் இடம்பெயர்ந்ததன் காரணமாக இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த ஜூலை 09ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மறுதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வேலு குமார் எம்.பி, மலையக பாடசாலை காணிகள் மீதான அத்துமீறலை எடுத்துக்காட்ட மூன்று உதாரணங்களை கூறியதுடன் தற்போதைய கல்வி அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மேலும் கேள்வி எழுப்பினார்.
“நாவலப்பிட்டி பிரதேசத்தில் தொலஸ்பாகே பாடசாலையின் காணி அத்துமீறி அபகரிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் பொத்தப்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தின் காணி அத்துமீறி கைப்பற்றப்பட்டுள்ளது. இரத்தினபுரியில் உள்ள கொலம்பகே தமிழ் வித்தியாலத்தின் காணியில் யாரோ அத்துமீறி நுழைந்துள்ளனர். இதற்கு கல்வி அமைச்சர் எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கை என்ன?” என அவர் கேள்வி எழுப்பினார்.
-பார்தீபன் சண்முகநாதன்-