Connect with us

உள்நாட்டு செய்தி

மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை நாட்டில் உருவாக்குவதுதான் உண்மையான புரட்சியாகும்

Published

on

  • மாறுபட்ட அரசியல் கருத்துக்கள் இருந்தாலும் நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசியலை ஒதுக்கி உழைத்ததால் பல சாதனைகளை நாட்டுக்கு கொடுக்க முடிந்தது.

மகாவலி எச். மற்றும் ஹுருலுவெவ வலயங்களில் 9 மகாவலி பிரிவுகளில் 4,012 பேருக்கு நிரந்தர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

“மக்களைக் கொல்வதோ வீடுகளை எரிப்பதோ உண்மையான புரட்சி கிடையாது. மாறாக நாட்டில் மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதே உண்மையான புரட்சி” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

‘உறுமய’ வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த நாட்டு மக்களால் அந்தப் பின்னணியை உருவாக்க முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உண்மையான சோசலிச வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் உறுமய வேலைத்திட்டத்துடன் அரசியல் நோக்கமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

தம்புத்தேகம மகாவலி விளையாட்டரங்கில் நேற்று (13) நடைபெற்ற உறுமய நிரந்தர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள மகாவலி எச். மற்றும் ஹுருலுவெவ ஆகிய இரண்டு வலயங்களில் உள்ள 9 மகாவலி பிரிவுகளில் 4,012 பேருக்கு இலவச காணி உறுதிகள் வழங்கப்பட்டன. 47 காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடையாளமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

தம்புத்தேகம பிரதேசத்திற்கு 50 வருடங்களுக்கு முன்னர் 1974 ஆம் ஆண்டு நான் சென்றிருந்தேன். இங்கு இருந்த அப்போதைய இடதுசாரி முன்னணி எம்.பி.யாக இருந்த ரத்னமலானவின் மரணத்திற்குப் பிறகு அந்த வெற்றிடத்திற்குப் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் பண்டாரநாயக்க குடும்பத்துக்குள் பிரச்சினை எழுந்தது. தான் போட்டியிடுவதாக அனுர பண்டாரநாயக்க தெரிவித்தார். அவருக்கு ஆதரவு வழங்குவீர்களா என எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனவிடம் கேட்டபோது ஆம் என அந்த நேரத்தில் அவர் பதில் அளித்தார். அப்போது திருமதி சந்திரிகா மற்றும் விஜய குமாரதுங்க ஆகியோர் அதனை எதிர்த்தனர். இறுதியாக ரத்னமலானவின் மகனை திருமதி பண்டாரநாயக்க தேர்தலில் நிறுத்தினார். இடைத்தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அதிகாரி நிறுத்தப்பட்டார். அந்த சமயம் நாம் இங்கு வந்தோம்.

அப்போது இந்தப் பிரதேசங்களில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. 10 வருடங்களின் பின்னர் 1984 இல் நான் தம்புத்தேகமவுக்குத் வந்தேன். அப்போது நாங்கள் ஆட்சியமைத்திருந்ததோடு அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் பிரதி அமைச்சராக அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். மகாவலி எச். வலயத்தை அமைச்சர் காமினி திஸாநாயக்க அவருக்குக் கையளித்தார். எங்கள் அனைவரின் ஆதரவோடு அதனை முன்னேற்ற அவர் உழைத்தார்.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கலாவெவ பிரதேசத்தின் பிரதான நகரமான தம்புத்தேகம புதிய நகரத்தை காமினி திஸாநாயக்க திறந்து வைத்தார். அன்றைய தினம் மத்திய மகா வித்தியாலயம், புதிய பஸ்தரிப்பு நிலையம், அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை, பிரதி அரச அதிபர் அலுவலகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

கல்வி அமைச்சராக அந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டதோடு போக்குவரத்துத்துறை அமைச்சராக எம்.எச். மொஹமட், சுகாதாரத்துறை அமைச்சராக ரஞ்சித் அத்தபத்து ஆகியோர் கலந்துகொண்டனர். அதற்கு முன்னர் தம்புத்தேகம மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கல்வி ஆரம்பிக்க அதிகாரியின் வேண்டுகோள்படி நடவடிக்கை எடுத்தேன். புதிய கட்டடம் வழங்கவும் ஏற்பாடு செய்தேன்.

இன்று தம்புத்தேகம மிகவும் அபிவிருத்தியடைந்த நகரமாக மாறியுள்ளது. 1984 ஆம் ஆண்டு நான் இந்த பிரதேசத்திற்கு வந்தபோது எனது நண்பர் அனுர திஸாநாயக்க அந்தப் பாடசாலையில் கற்றார். அந்தக் கல்லூரியில் உயர்தரக் கல்வி ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததால் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, நாம் ஆரம்பித்த களனிப் பல்கலைக்கழகத்தில் கற்று அதிலிருந்து பட்டம் பெற்று இப்போது பாராளுமன்றத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

கல்வி வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​ஜே.வி.பி. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த கல்வி வெள்ளை அறிக்கையில் இருந்து உருவான அவர் இன்று ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்திருப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன். இது கல்வி முறையின் வெற்றியைக் காட்டுகிறது.

இன்று நான் வந்தபோது, ​​பாடசாலையின் வளங்கள் இன்னும் போதுமானதாக இல்லை என அதிபர் குறிப்பிட்டார். எனவே தம்புத்தேகம கல்லூரிக்கு புதிய கட்டடமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்தப் பிரதேசங்களில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி முன்னோக்கிக் கொண்டு வந்தோம். நீர்ப்பாசன அமைச்சர்கள், மகாவலி அமைச்சர்கள் இந்த பிரதேசத்தில் இருந்து உருவானார்கள்.

அநுர திஸாநாயக்கவும் நானும் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படுகின்ற போதிலும் எமது அரசியல் வேறுபட்டது. சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் அரசியலின் ஆட்டக்காரர் மஹிந்த ராஜபக்ஷ என்று தெரிவித்தார். அது எனக்கு பிரச்சினை இல்லை. அவர் ஒரு ராஜபக்ஷவாதி என்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அரசில் பல ராஜபக்ஷவாதிகள் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவானவர்கள் பலர் உள்ளனர். ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஜனாதிபதி பதவிக் காலம் நிறைவடையும்போது அனுர பண்டாரநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த அவர் தயாரானார். ஆனால் அநுர திஸாநாயக்க தைரியமாக முன்வந்து மஹிந்த ராஜபக்சவுக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறு கூறினார். தேர்தலின்போது அவருக்கு ஆதரவாகப் பணியாற்றினார். இது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை. இன்று அரசியல் நோக்கமின்றி அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம். அவர்கள் ராஜபக்ஷவாதிகளா அல்லது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களா என்ற கேள்விக்கு இடமில்லை. வீழ்ந்த நாட்டை மீட்க அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். இலங்கையை போன்று வீழ்ச்சியில் இருந்து மீண்டு வேகமாக முன்னேறும் வேறு எந்த நாடும் கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதை ஏனைய நாடுகள் முன்னுதாரணமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தது. எந்த நாட்டிலாவது பிரதமர் பதவி வேண்டுமா என கையேந்திச் சென்றதுண்டா? 3 நாட்களாக பிரதமரை தேடினார்கள். வேறு நாடுகளின் அரசியலில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. எந்த நாட்டிலும், ஒரு ஆசனம் மாத்திரம் இருப்பவர் ஜனாதிபதியானதுண்டா? இந்த வீழ்ச்சியடைந்த அரசியல் முறைமையில் இருந்து இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். அரசியலின்றி உழைத்ததால் அந்த வெற்றியைப் பெற முடிந்தது. அதற்குமுன் எங்களுக்குள் பல்வேறு அரசியல் முரண்பாடுகள் இருந்தன.

ஆனால் நாடு வீழ்ச்சியடையும்போது அவ்வாறு செயற்பட முடியாது. அந்த நேரத்தில் நாம் ஒன்றுபடாவிட்டால் அரசியல் செய்ய ஒரு நாடு எஞ்சியிருக்காது. கடந்த இரண்டு வருடங்களாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பாடுபட்டோம். இந்த வங்குரோத்தடைந்த நாட்டில் சமுர்த்திக்குப் பதிலாக, மக்களுக்கு மும்மடங்கு நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும், அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் வழங்கிய சம்பள அதிகரிப்பின் பின்னர் முதன்முறையாக அந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு தேவையான அளவு உரத்தை வழங்கி நாட்டின் விவசாயம் முன்னேற்றப்பட்டுள்ளது.

கடந்த பொருளாதார நெருக்கடியால் நாட்டின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டனர். இப்போது நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்களை மறக்க முடியாது. கடந்த காலங்களில் இப்பிரதேச விவசாயிகள் எமக்கு நல்ல அறுவடையை வழங்கியுள்ளனர். அதனால்தான் பொருளாதாரத்தை வலுப்படுத்தி முன்னேற்ற முடிந்தது. அந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று நிரந்தரக் காணி உரிமை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும். இதுதான் உண்மையான சோசலிசம். நாம் ஒரு ஜனநாயக சோசலிச நாடு. எனவே, உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். சீனாவும் சோசலிசத்தின்படி பொருளாதாரத்தை முன்னேற்றி மக்களின் கைகளுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொடுத்தது.

நாட்டில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுகின்றன. இதை விட வேறு சோசலிசமும் புரட்சியும் இல்லை. புரட்சி என்பது மக்களைக் கொல்வதோ, விகாரையில் உள்ள பிக்குமாரை சுட்டுக் கொல்வதோ, வீடுகளை எரிப்பதோ அல்ல. இதுதான் உண்மையான புரட்சி. உறுமய வேலைத்திட்டத்தின் மூலம் இந்நாட்டில் 20 இலட்சம் மக்களுக்கு காணி உரிமை கிடைக்கும். மக்கள் இந்த உரிமையைப் பெற்றுக் கொண்டு பெருமையுடன் முன்னேறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதுவே உங்கள் விடுதலை. இப்போது நீங்கள் அதிகாரிகளின் பின்னால் செல்லத் தேவையில்லை. எனவே, அரசியல் நோக்கமின்றி இந்தத் திட்டத்தைத் தொடருமாறு அனைவரைக்கும் அழைப்பு விடுக்கிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். சந்திரசேன;
“இன்று ரஜரட்ட மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். பாரம்பரியமாக, இந்த பிரதேசத்தில் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். அடுத்த தலைமுறைக்கு பலத்தை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ரஜரட்டவிற்கு வந்துள்ளார். காணிப் பிரச்சினை மக்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நாட்டில் உள்ள பெரும்பாலான நீதிமன்றங்கள் நிலம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கின்றன என்றே கூற வேண்டும். நிலம் தொடர்பான வழக்குகளை தீர்க்கப் பல ஆண்டுகளாக மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றனர்.

இந்தப் பிரச்சினைகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக உறுமய வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்தார். இந்த பிரதேசத்தில் காணி அமைச்சர்களும் இருந்தனர். ஆனால் அவர்களால் மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. குறைந்த பட்சம் இந்த பிரதேசத்தில் இருக்கும் ஜே.வி.பி.யின் தலைவரால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. 1988-1989 இல் ஜே.வி.பி ஏற்படுத்திய அழிவு இந்த நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது. இந்த ரஜரட்ட பிரதேசத்தில் இருந்துதான் நாட்டுக்கு அரிசி வழங்கப்படுகிறது. 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொரகஹகந்த திட்டத்தில் இருந்தும் ரஜரட்டவுக்கு இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே ரஜரட்ட பிரதேசத்துக்கு நீரைப் பெற்றுக்கொடுக்கும் அவசர வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

முன்னாள் அமைச்சர் பி.ஹெரிசன்;
“உறுமய நிரந்தரக் காணி உறுதி வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதியின் கனவை நிறைவேற்றுவதாகும். ஏழு ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அதைச் செயல்படுத்த முடியவில்லை. ஜனாதிபதியின் அந்தக் கனவை நனவாக்க அர்ப்பணிப்புடன் இருக்கும் அரசியல் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாடு நெருக்கடியில் சிக்கியபோது ரஜரட்ட விவசாயிகள் போராடவில்லை. விவசாயத்துக்கு எரிபொருள், உரம், குழந்தைகளுக்கு பால்மா வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கினார். இயந்திரங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். இன்று முதல் நீங்கள் சுதந்திரமாக விவசாயம் செய்யலாம். சோசலிசப் புரட்சியின் உண்மையான தலைவர் ரணில் விக்ரமசிங்க என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க;
“இன்று நம் அனைவருக்கும் அதிர்ஷ்டமான நாள். இந்தக் காணி உறுதியைப் பெற மூன்று தலைமுறைகள் காத்திருக்கின்றன. அரசியல் பேதமின்றி ஜனாதிபதி இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். இந்த உரித்தை உங்களுக்கே சொந்தமாக்கி அதை சரியாகப் பயன்படுத்துங்கள். ஒன்றிரண்டு பேர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சமூகமும் பழி சுமக்கிறது.

ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அவருடன் ஒரே மேடையில் இணைந்துள்ளன. அரசியல் பகை இல்லாமல் ஒன்றுபட்டால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற செய்தியை இன்று எமது நாட்டுக்கு வழங்கியுள்ளோம்” என்றார்.

வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி;
“எந்தவொரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அந்த நபருக்கு நிலத்தின் மீது முழுமையான உரிமை இருக்க வேண்டும். அதனால்தான் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்தப் பணிகளை நிறைவு செய்ய ஜனாதிபதி தீர்மானித்தார். இந்த குறுகிய காலத்தில், ‘அஸ்வெசும’ திட்டத்தை செயல்படுத்தினார். இதன்போது உயர்தரம் மற்றும் தரம் 1 முதல் 11 வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான நிலுவை தொகையுடன் ஜனாதிபதி புலமைப்பரிசில் நன்கொடையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.6,000 மற்றும் தரம் 1 முதல் 11 வரை நாட்டிலுள்ள அனைத்து 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கித் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000 வீதமும் வழங்கப்படுகிறது. பிள்ளைகளுக்குக் கல்வி கொடுத்தால் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இவற்றைச் செய்கின்றார். அவரது சர்வதேச உறவுகளும் நீண்ட கால அரசியல் அனுபவமும் நாட்டை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

பல ஆண்டுகளாக பல்வேறு அரசாங்கங்கள் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டாலும் இதுவரை யாரும் தொடாத விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை இவர் ஆரம்பித்துள்ளார். விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் நம் நாட்டு விவசாயிகளின் விளைபொருட்களை உலகுக்கு எடுத்துச் செல்ல ஜனாதிதி திட்டமிட்டுள்ளார். இது பெரும் பாய்ச்சல் பாயும் யுகமாகும். பாரம்பரிய விவசாயிகளை முன்னேற்றும் காலகட்டமாகும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவே இவர் பங்காற்றுகிறார்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மகாசங்கத்தினர் தலைமையிலான மதத் தலைவர்கள், வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் சமன் தர்ஷன் படிகோரள, மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மகேந்திர அபேவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் சந்திரா ஹேரத், மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஜே.கே. ஜயசுந்தர மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.