Connect with us

முக்கிய செய்தி

நாட்டில் புதிய பொருளாதார, அரசியலமைப்பைக் கட்டியெழுப்ப மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது-ஜனாதிபதி-

Published

on

தேரவாத பௌத்த நாடுகள் அனைத்தும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், இறக்குமதிப் பொருளாதார முறையை பின்பற்றி இலங்கை மட்டுமே வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எனவே, நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

காலி கரந்தெனிய சிறி அபயதிஸ்ஸ பிரிவெனாவில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற அமரபுர மகா நிக்காய – ஆரியவன்ச சத்தம்ம பீடத்தின் 44ஆவது உபசம்பதா நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

அமரபுர மகா நிகாய – ஆரியவன்ச சத்தம்ம பீடத்தின் உபசம்பத நிகழ்வுகள் இலங்கை அமரபுர நிகாயாவின் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி மகாநாயக்க தேரர் தலைமையில் இன்று முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதோடு 98 பேர் இதன்போது துறவரத்தை ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.

600இற்கும் மேற்பட்ட விகாரைகளில் இருக்கும் 4000 இற்கும் மேற்பட்ட பிக்குகள்
அமரபுர ஆரியவன்ச சத்தம்ம பீடத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, இரு வருடங்களுக்கு ஒரு முறை உபசம்பதா நிகழ்வு நடத்தப்படும்.

காலி கரந்தெனிய சிறி அபயதிஸ்ஸ பரிவேனாவின் அதிபதி வண கினிகல பெதெஸ சுதம்ம தேரர், உபசம்பதா நிகழ்விற்காக வௌியிடப்பட்ட நினைவுப் புத்தகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கி வைத்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”துறவற வரலாற்றில் உபசம்பத நிகழ்வு முக்கியமானதாகும். அந்த விழாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே முன்பிருந்தே இதற்காக அரச அனுசரணை வழங்கப்படுகிறது. இன்றைய உபசம்பதா நிகழ்வும் அரசாங்க அனுசரணையுடன் நடைபெறுகிறது.

இலங்கையில் உபசம்பதா நிகழ்வு இல்லாத காலமும் இருந்தது. அப்போது, ​​பிக்குகளின் தலையீட்டுடன் சியம் நிக்காயவில் முதலாவது உபசம்பதா நிகழ்வு அரச அனுசரணையுடன் நடத்தப்பட்டது.

மீண்டும் அந்த முறைமை இல்லாது போயிருந்த வேளையில் மியன்மாரின் உதவியுடன் அமரபுர நிக்காயவில் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து அரச அனுசரணையுடன் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது. ஆங்கிலேயர் தென் பகுதிகளை ஆட்சி செய்த காலத்தில் துறவறத்தையும் சாசனத்தையும் பேணிக்காக்க ஆற்றிய சேவை அளப்பரியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றது. நீண்டகாலமாக பேணப்பட்ட இறக்குமதி பொருளாதாரக் கொள்கையினால் அந்த நிலைமையை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் மற்றைய அனைத்து தேரவாத பௌத்த நாடுகளும் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தன.

எனவே, நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டும். நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது” என ஜனாதிபதி தெரிவித்தார்.

நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

”ஒழுக்கம் இல்லாவிட்டால் சாசனம் அழிந்துவிடும் என்பது போல ஒழுக்கம் இல்லாத நாடும் சரிந்துவிடும். அதனால் புத்த தர்மத்தின் முன்னுதாரணம் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக அவசியமானதாக காணப்படுகிறது.

இலங்கையில் உபசம்பதா இல்லாத காலத்தில் தாய்லாந்தில் இருந்து அதனை கொண்டு வருவதற்காக இந்நாட்டு பிக்குகள் மூன்று தடவை தாய்லாந்து செல்ல வேண்டியிருந்தது. பல இன்னல்களுக்கு மத்தியில் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்த உபசம்பதா முறைமையை பாதுகாக்க மகா சங்கத்தினர் பாடுபட்டனர்.” என்று தெரிவித்தார்.

வண. கந்துனே அஸ்ஸாஜி மகா நாயக்க தேரர், அமரபுர நிக்காய – ஆரியவங்ச சத்தம்ம பீடத்தின் மகாநாயக்கர் குருநாகல் ரிதிகம ரப்படகல்ல விகாரையின் விகாராதிபதி எகொடமுல்லே அமரமொழி மகா நாயக்க தேரர், வண. வல்பொல விமலஞான அனுநாயக்க தேரர், கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, கயந்த கருணாதிலக்க, ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.