உள்நாட்டு செய்தி
ஜனாதிபதித் தேர்தல் வழக்கு உயர்நீதிமன்றில் பரிசீலனை!
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் வரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரியுள்ள அடிப்படை உரிமைகள் மனு உயர்நீதிமன்றில் இன்று ஐவர் அடங்கிய பூரண நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான இந்த ஆயத்தில் விஜித் மலல்கொட , முர்து பெர்னாண்டோ, பிரிதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்களும் உள்ளடங்குகின்றனர்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான திருத்தங்களால் குறித்த பதவிக்காலம் முடிவடையும் திகதி தொடர்பில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த மனு தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஐந்து இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 7 தரப்பினர் இவ்வாறு இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் திகதி எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.