முக்கிய செய்தி
நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும்போது அதனை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர்
- அரச ஊழியர்களுக்கு இவ்வருடம் சம்பள உயர்வை வழங்க முடியாது, ஆனால் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான பணம் ஒதுக்கப்படும்.
-பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு சிலர் அரச ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு செய்யச் சொன்னபோதும், நான் அதனை செய்யவில்லை
-பொருளாதார அச்சுறுத்தலில் இருந்து நாடு மீண்டுவரும் இவ்வேளையில் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரதும் ஆதரவு தேவை.
- போதைப்பொருளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும்
- கடல்வழி போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் பிராந்தியத் தலைவர்கள் இணைந்து செயற்படத் தீர்மானம்
- ஊவா மாகாண சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களை வலுவூட்டும் வகையில் இடம்பெற்ற முதல் அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், அரச சேவையாளர்களுக்கு இவ்வருடத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது எனவும், ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டதில் அதற்கான நிதியை ஒதுக்க முடியுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமற்போன வேளையில், 5 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்க வேண்டும் பலர் கூறிய போதும் தான் அதைச் செய்யவில்லை எனவும், VAT வரியை 18% இற்கு கொண்டு வந்து சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, இனியும் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்த முடியாது எனவும் வலியுறுத்தினார்.
“சட்டத்தை மதிக்கும் நாடு” எனும் தொனிப்பொருளில் வெல்லவாய பொது விளையாட்டரங்கில் நேற்று (6) நடைபெற்ற ஊவா மாகாண சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களின் வலுவூட்டல் செயலமர்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்ததன் பின்னர், மனித உரிமை பற்றிப் பேசும் சில சட்டத்தரணிகள் அவர்கள் சார்பில் ஆஜராக முன்வருவது ஆச்சரியமளிப்பதாக சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்தை விட போதைப்பொருள் கடத்தல் நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு பொருளாதார அச்சுறுத்தலில் இருந்து மீண்டுவரும் இவ்வேளையில் போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் எனவும் கூறினார்.
எதிர்கால சந்ததியினர் போதை பாவனைக்கு பலியாகும் பட்சத்தில், நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைக்கு விசேட பங்களிப்பை வழங்கிய ஊவா மாகாண சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:
“90 களில் விடுமுறையில் சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்தேன். நான் என் தந்தையின் நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். நான் அந்த வீட்டிற்குச் சென்றபோது, இன்று மாலை உங்களைப் பார்க்க போலீஸ்காரர் ஒருவர் வருவார் என்று சொன்னார். ஏன் என்று கேட்டேன். இல்லை, வெளிநாடுகளில் இருந்து நமது கிராமத்திற்கோ, நகரத்திற்கோ யாராவது வந்தால், பொலிஸாருக்கு அறிவிக்கும் வழக்கம் இங்கு உள்ளது என்றார்.
இந்த திட்டம் அந்த நாடுகளில் தினமும் செயல்பாட்டில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து யாராவது வந்தால், அவர்களைக் கண்காணிக்கின்றனர். இதனால் அந்த பகுதிகளுக்குள் தீவிரவாதிகள் நுழைவது கடினமாகும். போதைப்பொருள் கொண்டு வருவதும் கடினம். இன்று அந்த சமூகக் காவல் முறையை ஆரம்பித்துள்ளோம். இங்கிலாந்திலும் இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் யார் இருக்கிறார்கள் என்பது காவற்துறைக்குத் தெரியும். இந்தத் திட்டம் பல ஐரோப்பிய நாடுகளிலும் செயற்படுத்தப்படுகிறது.
ஆனால் இன்று லண்டன் உட்பட பல ஐரோப்பிய நகரங்களில் இந்த முறைமை சரிவைக் கண்டுள்ளது. அதனால்தான் எல்லா இடங்களிலும் திருட்டு நடக்கிறது. போதைப்பொருள் கடத்தலும் நடக்கிறது. இவ்வாறு சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதும் ரிஷி ஷுனக் அரசின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் முதல் கடமையாகும் என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 2021-2022 ஆம் ஆண்டுகளில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. வீடுகள் அழிக்கப்பட்டன, வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. இவ்வாறு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தபோது, அதனை சீரமைக்க வேண்டியிருந்தது.
நாட்டில் நடந்த அழிவுச் செயல்களுக்குப் பின்னால் போதைப்பொருள் வியாபாரிகளும் இருந்தனர். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும்போது போதைப்பொருளையும் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. போதைப்பொருள் தடுப்புக்காகவே இந்த சமூக பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, இது வெற்றி பெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இன்று இது ஒரு வெற்றிகரமான திட்டமாக மாறியுள்ளது.
இன்று பல பகுதிகளில் போதைப்பொருள் காரணமாக திருட்டு நடக்கிறது. போதைப் பொருள் வாங்க சிலர் திருடுகிறார்கள். இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது. இன்று ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருள் நம் நாட்டிற்கு வருகிறது.
இந்த போதைப்பொருள் பாகிஸ்தான், இந்தியா என அனைத்து நாடுகளுக்கும் வருகின்றது. இந்த போதைப்பொருள் கடத்தல் கடல் வழியாக நடைபெறுகிறது. எனவே, இந்த நடவடிக்கைகளுக்கு நாம் இப்போது கடற்படையை அனுப்ப வேண்டியுள்ளது. பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் இணைந்து தீர்வு காண இப்போது முடிவு செய்துள்ளன.
அதே சமயம் கிராமங்களிலும் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். பொதுச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். இந்த போதைப்பொருள் வர்த்தகத்தால் எமது எதிர்கால சந்ததியினர் அழிந்து வருகின்றனர். எனவே, இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இதற்கு அனைவரும் பொலிஸாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதில், கிராமங்களின் விகாரைகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு சிறப்புக் கடமை உள்ளது. மேலும், பாடசாலைகளிலும் இது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். சில மாணவர்கள் போதைப்பொருட்களை பாடசாலைளுக்கு கொண்டு வருகின்றனர்.
எனவே, போதைப்பொருளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி, நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த குழுக்கள் திறம்பட செயலாற்ற வேண்டும்.
இதன்போது விருப்பம் இன்றியேனும் சிலரைத் தடுத்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவை அல்ல. புதிய சட்டங்கள் தேவை. சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. நாம் அந்தளவு தூரம் செல்ல விரும்பவில்லை. ஆனால் இவர்களைத் தடுத்து காவலில் வைக்க வேண்டியது அவசியம்.
இவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு மனித உரிமை பற்றிப் பேசும் சில சட்டத்தரணிகள் இவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். அதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். போதைப்பொருள் கடத்தல் மனித உரிமை மீறல் என்று நம்புகிறேன்.
அவர்கள் போதைப்பொருள் விற்பனை மனித உரிமை மீறல் அல்ல என்கிறார்கள். ஆனால் போதைப்பொருள் வியாபாரிகளைக் கைது செய்வது மனித உரிமை மீறல் என்கிறார்கள். எனவே இது தொடர்பில் நமது நிலைப்பாடு என்ன என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்று நாம் மீண்டு வருகிறோம். கடந்த இரண்டு மூன்று வருடங்களில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டோம். சிலர் வாழ்வாதாரத்துக்காக திருடுகிறார்கள். ஆனால் இன்று சிலர் போதைப்பொருள் வாங்கத் திருடுகிறார்கள். இப்போது படிப்படியாக பொருளாதாரத்தை சீரமைத்து வருகிறோம். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைகளையும் பெற்றுள்ளோம்.
நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதே வேளையில், அரச நிதி முகாமைத்துவத்துக்கான பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம். அரச நிதிச் சட்டம், அரச கடன் சட்டம், மத்திய வங்கிச் சட்டம் ஆகியவையும் தயாரிக்கப்பட்டுள்ளன. நாம் இப்போது வரவு செலவுகளையும் முகாமைத்துவம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
கடந்த காலங்களில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். மேலும், அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வும் வழங்கப்பட்டது.
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளை ஒரே நேர்கோட்டில் செய்து வருகிறோம். இப்போது சிலர் சம்பள உயர்வு வேண்டும் என்கிறார்கள். இது கடினமானதாகும்.
ஆசிரியர்களுக்கு 2022 இல் சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். மேலும் 2024 இல் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. எனவே அந்தக் கோரிக்கைகள் நியாயமற்றவை. அவர்கள் இரண்டு சலுகைகளைப் பெற்றாலும், மற்றவர்களுக்கு ஒரு சலுகை மட்டுமே கிடைத்தது.
அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் முகாமைத்து உதவியாளர்களும் சம்பள உயர்வு கோருகின்றனர். இந்த சம்பள உயர்வு செய்தால் கொடுக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. அதனால் வரியை அதிகரிக்க வேண்டும். இப்போது 18% VAT வரி வசூலிக்கப்படுகிறது. சம்பள உயர்வு வழங்க, மீண்டும் VAT வரியை அதிகரிக்க வேண்டும். மக்களால் அதை தாங்க முடியாது.
மேலும் 10 இலட்சம் அரச ஊழியர்களே நாட்டில் இருக்க வேண்டும். இப்போது 15 இலட்சம் பேர் உள்ளனர். சிலர் 5 இலட்சம் பேரை சம்பளமில்லாத விடுமுறையில் அனுப்பச் சொன்னார்கள். கொடுப்பனவுகளை பின்பு செலுத்தலாம் என்றும் கூறினர். 10 இலட்சம் பேருக்கு சம்பள உயர்வு வழங்க வற் வரி 18 சதவீதமாக உயர்த்த வேண்டியுள்ளது.
அப்போது எவரையும் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று நான் கூறினேன். வற் வரியை உயர்த்தி, அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியிருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அவர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது.
அவ்வாறு சம்பள உயர்வு வழங்கினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். இம்மாதத்தின் மத்தியிலிருந்து தேர்தலுக்குத் தயாராக வேண்டும். ஆனால் அடுத்த வருடம் முதல் சம்பள திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதற்குத் தேவையான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நாடு பொருளாதார ரீதியாக முன்னேறும்போது சிலர் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இந்த சம்பள உயர்வுகளை வழங்கினால் எமக்கு கிடைக்கவிருக்கும் 8 பில்லியன் டொலர்களை இழக்க நேரிடும். நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தின்படி எந்தக் கட்சியாலும் இதைச் செய்ய முடியாது.
மேலும், நாம் இப்போது முன்னேறும்போது, நமது பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்ற வேண்டும். அதற்காக பொருளாதார மாற்றச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் விவசாய நவீனமயமாக்கலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஊவா மாகாணத்தை பாரிய விவசாய ஏற்றுமதிப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், பதுளை மாவட்டத்தில் சுற்றுலா, விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை அபிவிருத்தி செய்ய முடியும்.
நமது நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது நமது எதிர்கால சந்ததியினர் போதைப்பொருளால் அழிந்தால், நமது உழைப்பு வீணாகிவிடும். இளைஞர்களை பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகும்” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்:
“கடந்த இரண்டு வருடங்களை பின்னோக்கிப் பார்த்தால், நாட்டின் நிலைமை எல்லோருக்கும் தெரியும். மக்கள் வரிசையில் நின்று அவதிப்பட்டனர். நாடு தீப்பற்றி எரிந்தது. நாட்டில் தலைவர்களை தேடிப்பிடிப்பது கடினமாக இருந்தது. அப்போது ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்காக பிரதமர் பதவியை துணிச்சலாக ஏற்றுக்கொண்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு, அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.
அன்றிலிருந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி கடுமையாக உழைத்தார். நாட்டில் வரிசை யுகம் முடிவுக்கு வந்தது. சமுர்த்திக்கு பதிலாக, அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்பட்டது. எவ்வளவோ பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தபோதிலும், மாணவர்களுக்கான உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை போன்ற நிவாணைங்கள் வழங்கப்பட்டன.
இரண்டே ஆண்டுகளில் நாட்டை வழமை நிலையான நிலைக்குக் கொண்டு வர முடிந்தது. இந்த நடவடிக்கைகளுக்கு நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும். பாதாள கோஷ்டிகளும் போதைப்பொருளும் நாட்டை சீரழித்து வருகின்றன. அதைக் கட்டுப்படுத்தவே இந்தத் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளோம்.
‘யுக்திய’ திட்டம் இந்நாட்டு மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருடம் ஜூன் 31 ஆம் திகதிக்குள் இந்த நாட்டில் பாதாள கோஷ்டிகள் மற்றும் போதைப்பொருள் செயற்பாடுகளில் மா்றறம் ஏற்படும் என நான் அறிவித்தேன். பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே “யுக்திய” திட்டம் செயல்படுத்தப்பட்டது.
என்ன அழுத்தம் வந்தாலும் இந்த முன்னெடுப்பு நிறுத்தப்படாது. ஜனாதிபதியின் தலைமையில் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் இந்த நாட்டிலிருந்து பாதாள கோஷ்டிகளையும் போதைப்பொருளையும் இல்லாதொழிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.”
இந்நிகழ்வில் மாகாண மகா சங்கத்தினர் தலைமையில் ஏனைய மதத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.