முக்கிய செய்தி
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை….!
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களும் நியாயமற்றவை என்பது நிரூபனமாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையில் சுட்டிக்காட்டினார்-
கடன் தரநிலைகள் மேம்படுத்தப்படாததால், கடன் மறுசீரமைப்பு அர்த்தமற்றது என்று சிலர் கூறினாலும், அதில் எந்த உண்மையும் கிடையாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் வெற்றியடையச் செய்தல் மற்றும் நாட்டின் பொருளாதார குறிகாட்டிகளின் அடிப்படையில் நாட்டின் கடன் தரநிலைகளை உயர்த்த சர்வதேச நிதி நிறுவனங்கள் செயல்படும் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய நிலையிலிருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டமே ஒரே வழி என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடந்த காலப்பகுதியில் நாடென்ற வகையில் பெற்ற வெற்றிகளினால் அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், யார் ஆட்சிக்கு வந்தாலும் பின்னோக்கிச் செல்ல முடியாது என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் அதிகாரத்துக்காகவோ அல்லது அரசியல் பிரபல்யத்துக்காகவோ தாம் தீர்மானங்களை எடுக்கவில்லை எனவும், அனைத்து தரப்பினரும் சகல பேதங்களையும் விடுத்து நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இணைந்து கொள்ளுமாறு கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்,