உள்நாட்டு செய்தி
2018 திகன தாக்குதல்: விசாரணை அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை வெளியிடவில்லை….!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/07/WhatsApp-Image-2024-07-01-at-15.25.08_fe07aae6.jpg)
ஆறு வருடங்களுக்கு முன்னர் கண்டி மாவட்டத்தின் திகன பிரதேசத்தில் இடம்பெற்ற இனவெறித் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை இதுவரை அதிகாரிகள் பகிரங்கப்படுத்தத் தவறியமை முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் வலுவான மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவான சர்வதேச தினத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை (27) இலங்கை பத்திரிகை நிறுவனத்தில் திரையிடப்பட்ட “திகன முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்: 2018” என்ற சிறு ஆவணப்படத்தில், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையை பகிரங்கப்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி இரவு, திகனயில் ஆரம்பமான கண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அலை தொடர்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதே வருடம் மே மாதம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை சாட்சியங்களை கோரியிருந்தது.
ஆணைக்குழுவின் அப்போதைய தலைவி கலாநிதி தீபிகா உடகம தலைமையில் கண்டியில் விசாரணைகள் இடம்பெற்றதுடன், விசாரணை அறிக்கை அதே வருடம் ஜூலை மாதம் பகிரங்கப்படுத்தப்படும் என தலைவர் அப்போது அறிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் மீது நேரடியாக குற்றஞ்சாட்டப்படும் இந்த தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், ஓராண்டுக்கு முன்பு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என, செல்வமணி ஸ்ரீதரனால் தொகுக்கப்பட்ட ஆவணப்படத்தை தயாரித்த பார்தீபன் சண்முகநாதன் தெரிவிக்கின்றார்.
இத்தகவலால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கலந்துரையாடல் சபையில் உரையாற்றியதுடன், அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களை நியமிக்கும் வரை இலங்கையின் சுயாதீன நிறுவனங்களில் நீதியை நிலைநாட்டுவது கடினமாகும் எனக் குறிப்பிட்டார்.
கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஹக்கீம், எதிர்காலத்தில் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
2010 ஜனவரி 24ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர் பிரகீத் எக்னெலிகொடவைக் கண்டுபிடிக்க அசாத்திய துணிச்சலுடன் போராடியதற்காக சர்வதேச விருதைப் பெற்ற சந்தியா எக்னெலிகொட, இலங்கையில் அரச குற்றங்கள் தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என பார்வையாளர்கள் முன்னிலையில் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச சமூகத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு தனித்தனியாக நீதிக்காக போராடாமல் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கிறிஸ்தவ ஒற்றுமை இயக்கத்தின் தந்தை ஷெராட் ஜயவர்தன சபையில் வலியுறுத்தினார்.
புகைப்படங்கள் :-சண்முகம் தவசீலன்