உள்நாட்டு செய்தி
இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 117 பேர் கைது…!
நாட்டில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்து இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் நீர்கொழும்பு – கொச்சிக்கடை, தலங்கம மற்றும் மடிவெல பிரதேசங்களில் தங்கியிருந்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, தலங்கம – ஹெயினடிகும்புர பகுதியில் உள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், 19 பேரை கைது செய்துள்ளதுடன்,
அவர்களிடமிருந்து 09 மடிக்கணினிகள் மற்றும் 59 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர் .
நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் உள்ள விடுதியொன்றில் சோதனை நடத்திய போது,
மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 40 கணினிகள், நிதி மோசடிக்குப் பயன்படுத்திய 38 கையடக்கதொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன் பின்னர், மடிவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலும், கொச்சிக்கடை பொருதொட்ட பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மேலும் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இணையச் சூதாட்ட மோசடி இலங்கையிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.