முக்கிய செய்தி
நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது!
-அக்கமஹா பண்டித வண.இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர்
நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது. எனவே நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த மகா சங்கத்தினதும் ஆசி கிட்டும் என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் தலைவரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி அக்கமஹா பண்டித வண.இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (27) பிற்பகல் கொட்டாவ ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையின் தலைமை மகாநாயாக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் நிகழ்த்தப்பட்ட விசேட அனுசாசனத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி முதலில் விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதனையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகாநாயக்க தேரரின் நலம் விசாரித்ததுடன், சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், விகாரையின் அபிவிருத்திப பணிகளையும் பார்வையிட்டார்.
இலங்கை தற்போது அடைந்து வரும் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றம் குறித்து தேரருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு மீண்டும் இவ்வாறானதொரு பாதாளத்தில் வீழ்ந்துவிடாமல் இருக்க நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் அதற்காக எதிர்வரும் வருடங்களில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் எனவும் குறிப்பிட்டார்.
நாடு பேரழிவை எதிர்கொள்ளவிருந்த வேளையில் ஜனாதிபதிப் பதவியை ஏற்குமாறு வண.இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் விடுத்த அழைப்பை இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, குறுகிய காலத்திற்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு அன்று தான் தீர்மானித்ததாகவும், நாட்டுக்காக முன்வர விருப்பம் தெரிவித்த அனைவரினதும் ஆதரவைப் பெற்று மிகக் குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர முடிந்ததாகவும் குறிப்பிட்டார். இவ்வாறான நெருக்கடிகளை எதிர்நோக்கிய உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது இலங்கைக்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டின் அனைத்துப் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, தொழிற்சங்க நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
கொட்டாவ, ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையின் விகாராதிகரி, வண, பெலவத்தே புண்யரதன தேரர் மற்றும் விகாரையின் நன்கொடையாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.