Connect with us

முக்கிய செய்தி

வெள்ள நிலைமை ஏற்பட்டமை அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்

Published

on

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

அதன் பிரகாரம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான திட்டங்களை உடனடியாகத் தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மோசமான காலநிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமைக்கான காரணங்களைக் கண்டறிந்து அதற்குத் தீர்வுகாண்பதற்காக துறைசார் நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் சேதமடைந்த பகுதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் குறித்த பிரதேச அரசியல் பிரதிநிதிகள் நேரில் சென்று அவதானித்ததாகவும், இயற்கை காரணங்களைப் போன்று, ஒழுங்கற்ற மனித செயற்பாடுகளும் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாக உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களை விரைவாக தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். நபீல், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையை எதிர்கொண்ட பிரதேசவாசிகள் சிலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.