உள்நாட்டு செய்தி
அடுத்த இரண்டு பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கு MOP உரம் இலவசம்….!
ஜூலை 01 முதல் இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய வாரம்
கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர
ஜூலை 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராம வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய வாரமொன்று அறிவிக்கப்படவுள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
“விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இளைஞர் சமூகத்தை விவசாயத்துறைக்கு ஈர்க்கும் வகையில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. அது தொடர்பில் நாட்டின் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய 160 கிராமங்களை தெரிவு செய்து இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத் திட்டங்களை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ஜூலை 01ஆம் திகதி முதல் ஜூலை 07ஆம் திகதி வரை இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத் திட்டத்தை செயல்படுத்தும் தேசிய வாரமாக அறிவிக்கிறோம். முதற்கட்டமாக ஒவ்வொரு கிராமத்திலும் இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க 10 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 1600 மில்லியன் ரூபாவாகும்.
அத்துடன், 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாட்டின் காரணமாக, அந்த ஆண்டில் 08 இலட்சம் மெற்றிக் டொன் அரிசியை அரசாங்கம் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இதற்காக அரசாங்கம் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. ஆனால் 2023 ஆம் ஆண்டு நாட்டிற்கு தேவையான மொத்த அரிசியையும் உற்பத்தி செய்ய முடிந்தது.
2024 ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி செய்ய, அவசியமான தேசிய நெல் தேவை 4.1 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். 2023 இல் மொத்த நெல் உற்பத்தி 4.5 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். அடுத்த 05 போகங்களில் இந்நாட்டில் நெற்பயிர்ச் செய்கையை இரட்டிப்பாக்குவதே எமது இலக்காகும். இந்த இலக்கை அடைய, நெல் விளைச்சளுக்கான தொழில்நுட்ப பெகேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
நெற் பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில், பல்வேறு பிரதேசங்களில் ஒரு இலட்சம் ஹெக்டெயார்களை தேர்ந்தெடுத்து நெல் விளைச்சலை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக காலநிலைப் பாதிப்பு காரணமாக பயிர் சேதமும் அதிகரித்துள்ளது.
மேலும், இந்நாட்டிற்குத் தேவையான மொத்த முட்டை மற்றும் பால் உற்பத்தியில் இன்னும் நம்மால் தன்னிறைவு அடைய முடியவில்லை. 2021 உரப் பிரச்சினையால் கால்நடைத் தீவனமாக சோளம் உற்பத்தி குறைந்ததால் கோழி வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்பட்டது. நமது தேசிய சோளத் தேவை 06 இலட்சம் மெட்ரிக் டொன்கள் ஆகும். 2023 பெரும் போகத்தில் சோள விளைச்சல் 221,249 மெட்ரிக் டொன்களாக அதிகரித்துள்ளது.
முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களில் 160 இளைஞர் விவசாயத் தொழில்முனைவோர் கிராமங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும்.
அதேபோன்று, சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு தொடர்பிலும் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இறக்குமதி செய்யப்படும் 01 லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு 150 ரூபாவை அரசாங்கம் அறவிடுகின்றது. விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் எதிர்காலத்தில் இந்த தொகையை குறைக்கும் பரிந்துரையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளேன்.
நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய்த் தேவை 25,868 மெற்றிக் டொன் எனவும், தற்போது நாட்டில் 51,457 மெற்றிக் டொன் தேங்காய் எண்ணெய் இருப்பதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் சந்தையில் உரங்களின் விலை உயர்வால் நெல் உள்ளிட்ட ஏனைய பயிர் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்திடம் இருந்து MOP உரத்தைப் பெற கோரிக்கை விடுத்துள்ளோம். அதன்படி, 55,000 மெற்றிக் டொன் MOP உரத்தை வழங்குவதற்கு அந்த அமைப்பு இணங்கியுள்ளது. அடுத்த இரண்டு போகங்களில் நெல் விவசாயிகளுக்கு இலவசமாக MOP உரம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும், தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை மானிய அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி, அரசாங்கத்துக்குச் சொந்தமான உர நிறுவனங்கள் தேயிலை பயிர்ச்செய்கைக்கு அவசியமான உரத்தை உற்பத்தி செய்வதுடன், சந்தை விலையை விட 50% குறைவாக அந்த உரங்களை வழங்குகின்றன. இந்த உர மானியத்திற்காக செலவிடப்படும் தொகை 12 பில்லியன் ரூபாவாகும்” என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.