முக்கிய செய்தி
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச கண்காணிப்பு கோரப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத்தில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள வன்னியின் ஊடகவியலாளர் சங்கம், இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பில் சர்வதேச தலையீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பில் பொறுப்பான அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் உரிய கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள முல்லைத்தீவு ஊடக அமையம், இதன் காரணமாக சர்வதேச கண்காணிப்பாளர்களை நாடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
“வடக்கு கிழக்குப் பகுதியில் பக்கச்சார்பற்ற வகையில் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள்மீதான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இது குறித்த முறைப்பாடுகள் பொலிஸ் மற்றும் ஜனாதிபதி வரையிலான உயர்மட்டத்திற்கு அளிக்கப்பட்ட போதும், இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.”
யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியிலுள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் வீட்டின்மீது கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை, அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வருகைதந்த, ஐந்து பேர் அடங்கிய வன்முறைக் குழுவினாலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதலில் வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும், சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த நிலைப்பாடே, எந்த குற்றத்தையும் செய்துவிட்டு அதிலிருந்து தப்பிவிடலாம் என்கிற எண்ணபோக்கை ஏற்படுத்தியுள்ளதாக, முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களை தடுப்பதற்கான பின்னணியை அதிகாரிகள் ஏற்படுத்தாத சூழ்நிலையில் இந்த தாக்குதல் அரச அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஊடக அடக்குமுறை என முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கம் கருதுகிறது.
“முறைப்பாடு அளிக்கப்படும் போது அது விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், இவ்வாறான அச்சுறுத்தல்கள் நடைபெற்றிருக்காது.கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைக்கு இலங்கை அரசு துணைபோவதாகவே எம்மால் பார்க்கமுடிகின்றது.”
எனவே, தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைச் சம்பவங்களுக்கு முல்லைத்தீவு ஊடக அமையம் சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கப் பாதுகாப்புப் படையினரால் அண்மைக்காலமாக தொழில்முறை ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை முல்லைத்தீவு ஊடக அமையம் நினைவுகூர்ந்துள்ளது.
“கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றும் பல்வேறு ஊடகவியலாளர்கள் மீது இராணுவம், பொலிஸ், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர்களது மிலேச்சத்தனமாக சித்திரவதைகள், தொடர்ச்சியான கண்காணிப்பு அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், அடக்குமுறைச் சம்பவங்கள் என்பன இடம்பெற்றிருக்கின்றன.”
இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மேலதிகமாக, தமிழர்கள் என்ற காரணத்தினால் மாத்திரம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்படுதல், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்களால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகுதல், சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களினால் அச்சுறுத்தப்படுதல், தாக்குதலுக்கு உள்ளாகுதல் உள்ளிட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அத்துடன் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட 44 தமிழ் ஊடகவியலாளர்கள் விடயத்தில் எவரும் பொறுப்புக் கூறவில்லை என்பதோடு பாதிக்கப்பட்ட எவருக்கும் நீதி வழங்கப்படவில்லை எனவும் அமையம் குறிப்பிட்டுள்ளது.
“ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் வீடு தாக்கப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை என்பது, அவரின் சுயாதீனமானதும் வினைத்திறனானதுமான ஊடக செயற்பாட்டிற்கு அடிக்கப்பட்ட சாவு மணியாகும்.” என முல்லைத்தீவு ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் ஊடகவியலாளர்களின் ஊடக பணிக்கு இடையூறு விளைவிக்கும், அச்சுறுத்தல் மேற்கொள்ளும் செயற்பாடுகளை முல்லைத்தீவு ஊடக அமையம் வன்மையாக கண்டிப்பதுடன் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளில் அக்கறையுள்ள உரிய தரப்புக்களும், சர்வதேச அமைப்புக்களும் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி நிற்பதாக குறித்த அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.