முக்கிய செய்தி
அதிகாரப்பகிர்வு குறித்த எதிர்காலத் திட்டத்தை இப்போதே வெளிப்படுத்துமாறு NPP’க்கு சவால்
கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை உருவாக்க முன்வருமாரு அழைப்பு விடுக்கும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருக்கு, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான எதிர்கால நிலைப்பாட்டை இப்போதே வெளிப்படுத்துமாறு தமிழ் கட்சித் தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தமிழ் அரசுக் கட்சியுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிவாஜிலிங்கத்திடம் வினவியபோதே அனுர குமாரவிற்கு, அவர் இந்த சவாலை விடுத்தார்.
மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் நேரடியான கருத்தை வெளியிடாத வருங்கால ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க ‘கடந்த காலத்துடன் வாழ்வதை’ கடுமையாக மறுத்திருந்தார்.
“கடந்த காலத்தை மறந்து என்றால், எதிர்காலத்தில் என்ன நிலைப்பாட்டை நீங்கள் ஆதரிக்க போகின்றீர்கள் எனச் சொல்லாமல் கடந்த காலத்தை மறந்துவிடுங்கள் எனச் சொன்னால் என்ன செய்ய முடியும். இப்பொழுது வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் தீர்மானத்தை கொண்டுவரட்டும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிலே சரத் என் சில்வா சொல்லியிருக்கின்றார் ஜே.வி.பியினரால் தொடரப்பட்ட வழக்கில்கூட அருகில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் நாடாளுமன்றத்திலே சாதாரண பெரும்பான்மையுடன் இணைக்கட முடியும் என. அந்தத் தீர்மானத்தை ஜே.வி.பி கொண்டுவரட்டும்,” என எம். கே. சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.
1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களின் வரலாற்று தாயகமாக அங்கீகரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு, அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் ஒரு மாகாணமாக இணைக்கப்பட்டது.
அதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த வழக்கில், பிரதம நீதியரசர் சரத் என். சில்வா உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு, இணைப்பை இரத்து செய்வதாக தீர்ப்பளித்ததோடு, ஒக்டோபர் 16, 2006 அன்று வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டது.
அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என தெரிவித்த நீதிமன்றம், இது தொடர்பில் நாடாளுமன்றம் மாத்திரமே தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியது.
வடக்கு கிழக்குப் பிரிவிற்கு அநுர குமார திஸாநாயக்கவே காரணம் என சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன என வடக்கின் ஊடகவியலாளர்கள் ஜூன் 10ஆம் திகதி அனுர குமாரவிடம் கேட்டபோது, இந்த தருணத்தில் கடந்த காலத்தை அல்ல எதிர்காலத்தை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.
“உண்மையில், வரலாற்றில் நம் ஒவ்வொருவருடைய கைகளாலும் நமக்கு நடந்த சம்பவங்கள் உள்ளன.
நாம் கடந்தகால வரலாற்றில் வாழ்கிறோமா, எதிர்காலத்திற்கான கதவுகளைத் திறக்கிறோமா என்பதை இப்போது சிந்திக்க வேண்டும். எனவே வரலாற்றைப் பற்றி விவாதித்தால், பல்வேறு தரப்பினருடன் பல்வேறு விடயங்களை வரலாறு தொடர்பில் விவாதிக்கலாம். தற்போது, நாம் வரலாற்றைப் பற்றியல்ல, எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதுதான் எங்கள் யோசனை.”
தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகள் குறித்து வலுவான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என கூறும் அநுர குமார திஸாநாயக்க, கடந்த காலத்தில் வாழ்ந்தால் எதிர்காலத்தை உருவாக்க முடியாது என தனது கட்சியின் நிகழ்ச்சி நிரலை வெளியிடாமல் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
“எதிர்காலத்தை உருவாக்குவதற்கு, தமிழ் பேசும் மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு அரசியலின் உரிமைகள் குறித்து ‘வலுவான உறுதிமொழி’ஐ வழங்க வேண்டும். மேலும், அந்த மக்கள் குறித்து முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த விடயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் அனைவரும் கடந்த காலத்துடன் வாழத் தொடங்கினால், எதிர்காலத்தை உருவாக்க முடியாது.”
வடக்கு கிழக்கை இணைப்பதற்கு இந்த தருணத்தில் நடவடிக்கை எடுக்காமல், கடந்த காலத்தை மறக்க யோசனை முன்வைக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவரிடம், யுத்தத்தின் போதான அவரது கட்சியின் பங்களிப்பை நினைவுகூர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாாடுகளை ‘ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதை’ என விமர்சித்தார்.
“பழையதை மறப்போம் என்றால், பழையதை பல்லாயிரணக்கனக்கான இளைஞர்களைத் திரட்டி இராணுவத்திற்கு கொடுத்து விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் கொன்ற இனப்படுகொலை போர்க்குற்ற யுத்தத்தை தீவிரப்படுத்தியவர்களே ஜே.வி.பியினர். ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையாக, இன்று ஓநாய்கள் இன்று அழுகின்றன. அவர்கள் எப்படிப்பட்டவர்கள், எவ்வாறு செயற்பட்டார்கள் என தெரியும். ஏதாவது செய்ய வேண்டுமெனின் இப்பொழுதே செய்யுங்கள்.”
தற்போதுள்ள மாகாண சபைகளுக்கு அப்பால் செல்லும் செயற்பாடு ஒன்று தேவை என இலங்கை தமிழ் அரசு கட்சியுடனான கலந்துரையாடலின் பின்னர் அனுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்திருந்தார்.
“தற்போது மாகாண சபைகள் என்பது அதிகாரப் பகிர்வு. எனவே ஏற்கனவே செயற்படும் மாகாண சபைகள் தொடர்பில் எமது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளோம். அது மாத்திரமன்றி மாகாண சபைகளில் தற்போது நிலவும் நிலைமைக்கு தீர்வு காணப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். எனவே, அதைத் தாண்டிய ஒரு செயல்முறை நமக்குத் தேவை.
அரசியலமைப்பு, சட்டம், நடைமுறை, பொருளாதாரம் என பல துறைகளில் மாற்றங்கள் மூலம் மட்டுமே தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
13 பற்றி ஐக்கிய மக்கள் சக்தி
இதேவேளை, ஜூன் 9ஆம் திகதி, கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தமது அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என மீண்டும் உறுதியளித்திருந்தார்.
“மற்ற தலைவர்கள் ஒவ்வொரு பொய், ஒவ்வொரு நேரத்தில், ஒவ்வொரு சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு பக்கத்தில், 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என தெளிவாக கூறியுள்ளோம். 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம். சர்வதேச தொழிலாளர் தினத்திலும் அந்த உறுதிமொழியை வழங்கினோம். இன்று நாம் வடக்கிற்கு வந்து எமது நாட்டின் உச்ச சட்டப் புத்தகத்தில் உள்ள 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவோம் என நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு உள்ளிட்ட ஒன்பது மாகாண மக்களுக்கும் அறிவிக்கின்றோம்.”
ஜூன் 11ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் அரசு கட்சித் தலைவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரைடியபோது, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் நேரரடியான பதிலை வழங்கத் தவறியிருந்தார்.
13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்போது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமா என ஊடகவியலாளர்கள் வினவிய போது, ’13 மைனஸ் அல்லது பிளஸ்’ பற்றி பேசவில்லை என எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் பதிலளித்தார்.
“13வது அரசியலமைப்புத் திருத்தம் வானத்தில் இருந்து விழுந்த புதிய விடயமல்ல. இது நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தில் உள்ள ஒன்று. அதைச் செயல்படுத்தும்போது, அதை எவ்வாறு திறமையாக, திறம்பட, ஒழுங்காக, முறையாகச் செயல்படுத்தலாம் என வழி வரைபடத்தை (road map) உருவாக்கி அதைச் செயல்படுத்த வேண்டும். எனவே, 13வது அரசியலமைப்பு திருத்தம் பற்றி பேசுகிறேன். இது 13 மைனஸ் அல்லது 13 பிளஸ் பற்றி அல்ல.”