முக்கிய செய்தி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 10,000 ரூபா உதவித் தொகை
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ மக்களின் நலன்களை விசாரிக்க சென்ற சாகல ரத்நாயக்க தெரிவிப்பு.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
வீட்டைச் சுத்தம் செய்வதற்கு இந்தப் பணம் வழங்கப்படுவதாகவும், அனர்த்தம் காரணமாக பகுதி அளவில் அல்லது முழுமையாக சேதம் அடைந்த அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர், அடுத்த நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச மக்களின் நலன்களைத் தேடியறியும் நோக்கில் இன்று (07) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டபோதே சாகல ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைப் பார்வையிட்ட சாகல ரத்நாயக்க, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கொலன்னாவ ஸ்ரீ சம்புத்தராஜ புராண விகாரையில் நடைபெற்ற நடமாடும் மருத்துவ முகாமிற்கும் சென்று பணிகளை பார்வையிட்டார்.
அதன் பின்னர், கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொண்டார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க கூறியதாவது:
பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் 10,000 ரூபா கொடுப்பனவு உடனடியாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், பகுதி அளவில் அல்லது முழுமையான சேதம் ஏற்பட்ட வீடுகளைக் கண்டறிந்து, அந்தக் குடும்பங்களுக்கு மேலும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
2019 சுற்றறிக்கையின்படி, வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால், இடைத்தங்கல் முகாமில் இருந்த மக்களுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் சுற்றறிக்கையை மாற்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, அந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று வீட்டை துப்புரவு செய்யும் பணிகளைத் தொடர முடியும்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் அனர்த்தத்தினால் முற்றாக சேதமடைந்த வீடுகள் அனைத்தும் இராணுவத்தின் பங்களிப்புடன் அரச செலவில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மருந்துகள் தேவைப்படும் மக்களுக்கு மருந்துகளை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகு, மக்கள் பொதுவாக தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக சிறு குழந்தைகளையும் முதியோரையும் இதுபோன்ற நோய்களில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், டெங்கு நோய் பரவும் அபாயத்தில் உள்ளோம். அதை எதிர்கொள்ளும் திட்டத்தை தயாரித்துள்ளோம். கடற்படை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்படாத அருகில் உள்ள மக்களையும் இணைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிணறுகளை மீண்டும் பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனர்த்தத்தினால் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க வைத்திய முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு மருத்துவக் குழுக்களும் வைத்திய முகாம்களை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. பிரதேச செயலகங்கள் ஊடாக பல மருத்துவ சிகிச்சை நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இராணுவ மருத்துவக் குழுக்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேச மக்கள் குறித்தும் ஜனாதிபதி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இதுபோன்ற வெள்ளப்பெருக்கு மீண்டும் ஏற்படாமல் இருக்க தகுந்த திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அனுமதியற்ற நிர்மாணங்கள், காணிகளை நிரப்புதல் போன்ற காரணங்களால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனவே, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் காணி நிரப்புப் பணிகளை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறவும் எதிர்பார்க்கப்படுகிறது.
களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்காக புதிய நகரமொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக மருத்துவமனைகள், பாடசாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் IDH மருத்துவமனை, இ.போ.ச டிப்போ போன்ற அரச நிறுவனங்கள் உள்ளன. எனவே புதிய நகரை உருவாக்குவது குறித்து இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு அனைவரின் இணக்கப்பாட்டுடன் சரியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இத்திட்டம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.” என்று அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் கொலன்னாவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.