உள்நாட்டு செய்தி
டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஆதரவு அவசியம்….!
டெங்கு நோய் சுகாதாரப் பிரச்சினை மட்டுமன்றி, அது ஒரு பொருளாதார, சமூகப் பிரச்சினையாக உள்ளதாகவும், பொதுமக்களின் பூரண ஆதரவின்றி சுகாதார அமைச்சினால் மட்டும் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(06) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் கலாநிதி சுதத் சமரவீர இதனைக் குறிப்பிட்டார்.தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமையுடன் டெங்கு, தொற்றுநோய் மட்டத்திற்கு அதிகரிக்கக் கூடும் என்பதால் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.டெங்கு என்பது வயது மற்றும் அந்தஸ்தைப் பார்க்காமல் தொற்றக்கூடிய ஒரு நோயாகும். மேலும், பலர் இந்த நோயிலிருந்து மீண்டாலும், உயிரிழப்பு அபாயம் உள்ள ஒரு நோய் இது. இந்த அபாயம் காரணமாகத்தான் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காலப்பகுதியில் பருவமழை வருவதால் டெங்கு பற்றி அதிகம் பேச வேண்டியுள்ளது.அதன்படி, 2023 இன் இறுதியில் ஏற்பட்ட தொற்றுநோய் நிலைமையுடன் ஒப்பிடுகையில் 2024 ஜனவரி இல் 10,000 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.ஆனால் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து ஏப்ரல் மாதமளவில் 2234 நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளனர். ஆனால் மே மாதத்தில் 2647 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதன்படி, எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.டெங்கு என்பது உடல்நலப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு பொருளாதார மற்றும் சமூக பிரச்சினையாகும். எனவே, பொதுமக்களின் பூரண ஆதரவின்றி சுகாதார அமைச்சினால் மாத்திரம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாது. நாடென்ற வகையில் அரசாங்கத்தின் அனைத்து துறைகள், தனியார் துறைகள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே டெங்கு நோயைத் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.