உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நிச்சயம் நடைபெறும் – அமைச்சர் பந்துல குணவர்தன
இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் எனவும், அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது கட்டாயமாகும் எனவும் தேர்தலுக்கான திகதிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தற்போதைக்கு பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது எனவும், அரசியல் வங்குரோத்து நிலையில் உள்ளவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் இவ்வாறான பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதாகவும், சர்வஜன வாக்கெடுப்பு அல்லது வேறு வழிகளில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கலாநிதி குணவர்தன தெரிவித்தார்.ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்துவதே ஜனாதிபதியின் நோக்கமாகும் எனவும், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் முதலில் பொதுத் தேர்தலை நடத்தலாம் என்ற செய்தியை மறுத்த ஜனாதிபதி விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என அண்மையில் அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.