Connect with us

முக்கிய செய்தி

யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும்!

Published

on

வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டிடத்தை இன்று (24) முற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

பொறியியல் பீடங்கள், மருத்துவ பீடங்கள், விஞ்ஞான பீடங்கள், விவசாய பீடங்கள் உட்பட விஞ்ஞான பாடங்களை அடிப்படையாக கொண்ட இந்த நாட்டில் உள்ள அனைத்து பீடங்களும் தற்போது பழைய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதாகவும், புதிய உலகிற்கு ஏற்றவகையில் இந்த தொழில்நுட்பத்தை மாற்றியமைக்க வேண்டுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிள்ளைகள் தமது திறமையை வெளிப்படுத்துவது இந்த நுட்பத்தைப் கற்பதன் மூலம் அல்ல. அது அவர்களின் அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்பதை மேலும் சுட்டிக்காட்டிய அவர், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்நாட்டில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து இது தொடர்பான பரிந்துரைகளை தயாரித்து தமக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டிடம், 46 வருடங்களின் பின்னர் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டிடம் இதுவாகும். இதற்காக 942 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறை கட்டிடம் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் பயிற்சிக்காக 1200 மாணவர்களுக்கு இடமளிப்பதுடன் சர்வதேச ஆராய்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க உதவுகிறது.

6000 சதுர மீட்டர் கட்டிடத்தில் பல விரிவுரை நிலையங்கள், மருத்துவ திறன்கள் ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடமும் உள்ளது. அறுவை சிகிச்சை நிலையங்கள், மீட்பு அறைகள், சுத்தம் செய்யும் பகுதிகள், அகற்றல் பகுதிகள், ஸ்டெரிலைசேஷன் பிரிவுகள், தயார்ப்படுத்தல் அறைகள் மற்றும் களஞ்சிய வசதிகள் ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.
நோயாளிகள் தங்கும் அறைகள், ஆலோசனை அறைகள் மற்றும் எண்டோஸ்கோபி, வாஸ்குலர் அறுவை சிகிச்சை மற்றும் மேமோகிராபிக்கான சிறப்புப் பிரிவுகள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், தடயவியல் விசாரணைப் பிரிவு மற்றும் அருங்காட்சியகம் ஆகியவையும் இதில் அடங்கும்.

மகப்பேற்று மருத்துவத் துறையால் நிர்வகிக்கப்படும், கருவுறுதல் பராமரிப்புப் பிரிவு சிறப்பு ஆலோசனைகள், நோயறிதல் சேவைகள் மற்றும் சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்கும். மருத்துவ பரிசோதனை பிரிவு (CTU) உள்நாட்டில் அறியப்பட்ட நோய்களுக்காக குறைந்த செலவில் செய்யக்கூடிய சிகிச்சைகள் பற்றிய மருத்துவ ஆராய்ச்சிக்கு வசதிகள், மருத்துவ மரபியல் பிரிவு (CGU) மரபணு நோயறிதல் மற்றும் நோயாளர் பராமரிப்பு வசதிகளுடன் நோய் தடுப்புக்கான அறிவையும் வழங்கும்.

பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, புதிய கட்டிடத்தை மேற்பார்வையிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

“யாழ்.மாவட்டத்திற்கு தேசிய வைத்தியசாலையை வழங்குமாறு நீங்கள் அனைவரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தீர்கள். கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் அனுமதி வழங்கினோம். அத்துடன், யாழ்ப்பாண வைத்தியசாலையை அடுத்த தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அப்போது கொழும்பில் மாத்திரமன்றி தெற்கு, வடக்கு, மற்றும் மத்திய மாகாணங்களிலும் சிறந்ததொரு வைத்தியசாலைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அத்தோடு நின்று விடாமல் அபிவிருத்தி செய்ய வேண்டிய ஏனைய பகுதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நான் அடிக்கடி யாழ். மாவட்டத்திற்கு வருகை தருவதாக இங்கு குறிப்பிடப்பட்டது. உண்மையில் நான் இந்த முறை இங்கு வைத்தியசாலைகளை திறப்பதற்காக வந்தேன். நான் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையில் வந்துள்ளேன். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.நான் கடந்த முறை இங்கு வருகை தந்தபோது, நெதர்லாந்துத் தூதுவர் இந்த இரண்டு புதிய மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இங்கு வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால் இந்த வார இறுதியில் இங்கு வந்து இந்தச் செயற்பாடுகளை நிறைவு செய்யத் தீர்மானித்தேன்.
யாழ்ப்பாண மாவட்டம் நீண்டகாலமாக அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கவில்லை. வருமானம் போதியளவில் இல்லை. மக்கள் வேலைத் தேடும் நிலை காணப்படுகிறது. யாழ்.மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான அநேகமான சாத்தியங்கள் உள்ளன.

யாழ்.மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடிந்துள்ளது. தடுப்புக்காவலில் உள்ள கைதிகள் தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான பிரச்சினைகளும் உள்ளன.

எங்களால் இன்னும் இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அதற்கான தீர்வுகள் தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகளைச் சுற்றியே உள்ளன. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல், காணாமல் போனோர் விவகாரம், இழப்பீடுகள், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நாம் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே நேரம் என்று நான் நம்புகிறேன்.

அதற்கு அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சித்து வருவதோடு, வடகிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளேன்.

முன்னைய ஆணைக்குழு அறிக்கைகள் அனைத்தையும் ஆராய்ந்து தொகுக்கப்பட்ட நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கை அண்மமையில் எமக்கு கிடைத்தது. இந்த அனைத்து ஆணைக்குழு அறிக்கைகளின் தாய் அறிக்கையாகவும், இது தொடர்பான கடைசி ஆணைக்குழு அறிக்கையும் அதுவாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதற்காக மற்றுமொரு ஆணைக்குழுவின் அவசியம் இல்லை.
காணாமல் போனோர் அலுவலகம் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்ற அவர்களின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதை அப்படியே செய்ய வேண்டும். காணாமற்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகள் தொடர்பான முழுப் பிரச்சினைக்கான தீர்வுகளிலும் மாற்றங்கள் செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களால் அதிகளவு இழப்பீடு தொகையை செலுத்த முடியவில்லை. எனவே அதற்காக பணம் ஒதுக்க வேண்டும். அத்துடன் எது உண்மை, என்ன நடந்தது, நல்லிணக்கத்திற்காக நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்விக்குறி காணப்படுகிறது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (TRC) கொண்டு வருவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. ஆனால் நீதிமன்ற அதிகாரம் குறித்த பிரச்சினைகள் அதற்குள் காணப்படுகிறது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் நீதித்துறை அதிகாரங்கள் எமக்கு இருக்க வேண்டுமா அல்லது அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீதித்துறை அதிகாரங்களைச் செயற்படுத்தும் தனி நீதிமன்றம் வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மேலும் இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே, இது குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை சட்டமாக்குவதற்கு எமக்கு ஆதரவளித்த மூன்று தூதுவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்குமாறு இரண்டு அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளேன்.

இதன் மூலம் பல பிரச்சினைகள் தீரும் என நம்புகிறேன். எனவே, இதுபற்றி கலந்துராயடி, சாத்தியமான தீர்வுகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவோம் என்று அமைச்சர்களிடம் தெரிவித்தேன்.

அத்துடன், வட மாகாணம் அபிவிருத்திக்காக சாத்தியக்கூறுகளை அதிகமாக கொண்டிருக்கிறது. இந்த மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பெருமளவில் உள்ளது. அதனால் யாழ்ப்பாணத்தை இலங்கையின் முக்கிய வலுசக்தி மையமாக கட்டியெழுப்ப முடியும். வடமாகாணத்தில் இந்த வலுசக்தியை நாம் இதுவரை பயன்படுத்தவில்லை. ஆனாலும் ஜிகாவொட்கள் அளவிலான வலுசக்தி இங்கு உள்ளது.

மேலும், நாட்டில் போட்டி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். வடக்கு மாகாணம் அதற்குள் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. இங்குள்ள விவசாயிகளுக்கு அதற்கான திறன் உள்ளது. இதன் மூலம் வடமாகாண மக்களின் வருமான மட்டத்தை பாரியளவில் மேம்படுத்த முடியும்.

மேலும், கைத்தொழில்களைப் பொறுத்த வரையில் காங்கேசந்துறையில் முதலாவது முதலீட்டு வலயத்தை அமைப்பது குறித்தும், பின்னர் பரந்தன் மற்றும் மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். மேலும் திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றோம். வடக்கில் சுற்றுலாத்துறைக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.
எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள தரைமார்க்க தொடர்பின் மூலம் யாழ்ப்பாணம் உள்ளடங்களாக முழு வடக்கு மாகாணமும் புரட்சிகரமாக மாறும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் வடமாகாணத்தை இலங்கையின் பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய முடியும்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் சில நடனக் அம்சங்கள் இங்கு இடம்பெற்றன. அவர்களைப் பாராட்டுகிறேன். அவர்களில் பெரும்பாலானோர் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று துணைவேந்தர் கூறினார். அதாவது 2002 மற்றும் 2003 இல் பிறந்தவர்கள். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்பட வேண்டும்.
அவர்களைத்தான் Gen Z என்று அழைக்கிறோம். அவர்கள் தங்கள் எதிர்காலத்திலம் குறித்து அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இதன் காரணமாகவே புதிய பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் விரைவான அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கான சட்டங்களைக் கொண்டுவருவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதையும் கூற வேண்டும்.” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“2003ஆம் ஆண்டு முதல் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் இந்தக் கட்டிடத்தை நிர்மாணித்து தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது. தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், விவசாய பீடம் உட்பட ஏனைய கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வுகள் வழங்கப்படும். கடந்த காலங்களில், போராட்டக்காரர்களின் பிடியில் நாடு இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட யாரும் நாட்டைப் பொறுப்பேற்க முன்வரவில்லை.

அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இன்று நாட்டில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணிக்க முடியாத வாகனத்தை பொறுப்பேற்று அதனை திருத்தியமைத்து போக்குவரத்திற்க ஏற்ற நிலைக்கு கொண்டுவந்துள்ளார். எதிர்காலத்தில் அந்த வாகனத்தை மிகச் சிறப்பாக ஓட்டும் திறமை அவருக்கு உண்டு. அதற்குத் தேவையான அர்ப்பணிப்பு அவரிடம் உள்ளது. ஜனாதிபதி அதை செயலில் நிரூபித்ததால் அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் வட. மாகாணத்தின் அபிவிருத்திக்காக பல பணிகளை செய்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு வழங்கப்படும் இக்கட்டிடமானது வடக்கிற்கு வழங்கப்படும் அபிவிருத்தியின் மற்றுமொரு உதாரணமாகவே நான் காண்கின்றேன்.
குறிப்பாக காணி வழங்கல் விவகாரம் தொடர்பில் வடக்கு மக்களின் சார்பாக அவர் தீர்மானங்களை எடுத்தார். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக பல பணிகளைச் செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்
ஜனாதிபதி அவர்களே, யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இச்சபையில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இன்று இங்கு வந்ததற்கு தனிப்பட்ட முறையில் நன்றி கூறுகிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். இன்று திறந்து வைக்கப்படும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்த மருத்துவ பீடக் கட்டிடம் வடக்கிற்கு மாத்திரமன்றி நாட்டிற்கும் ஒரு நல்ல முதலீடாகும் என சுட்டிக்காட்டலாம்.
மேலும் இது எதிர்காலத்தில் இலங்கையில் நிபுணர்களின் புகலிடமாக மாறும் என நான் நம்புகிறேன். முன்னதாக இச்சபையில் உரையாற்றியவர்கள் கூறியது போல் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

2005 இல் உங்கள் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை வடபகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கிறேன். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை நான் வாழ்த்துகிறேன்.

இந்த முதலீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை அன்புடன் வரவேற்பதுடன், இந்த விஜயத்தின் போது வடக்கிற்கு அவர் ஆற்றிவரும் அனைத்து பணிகளையும் பாராட்டுகின்றோம்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்
46 வருடங்களின் பின்னர் யாழ்.பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறைக் கட்டிடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளதன் மூலம் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறையின் முதலாவது நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிடம் இந்தக் கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்க முடியுமா என்று கேட்டேன். மே மாதம் வருவதாக உறுதியளித்தார். வாக்குறுதியளித்தபடி அவர் இங்கே வருகை தந்திருக்கின்றார்.

கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ராஜேந்திர சுரேந்திரகுமாரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.