உள்நாட்டு செய்தி
கிழக்குப் பல்கலை மாணவர்களை மிரட்டிய பொலிஸார்…!
இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வரும் நிலையில் நினைவேந்தலை மேற்கொண்ட கிழக்குப் பல்கலை மாணவர்களை பொலிஸார் மிரட்டியுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (18.05.2024) மாணவர்களால் நினைவேந்தல் நடைபெற்றுள்ள நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது நினைவேந்தலுக்கு மாணவர்களால் வைக்கட்டிருந்த பொருட்கள் பொலிஸாரால் வீசப்பட்டுள்ளதுடன் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ச்சியாக சீருடை தரிக்காத பொலிஸார் அங்கிருந்த அனைவரையும் காணொளி பதிவு செய்ததோடு ஊடகவியலாளர்களையும் தெளிவாக தெரியும் வகையில் பதிவுகளை எடுத்துள்ளனர்.
பொலிஸாரின் அச்சுறுத்தல் மத்தியிலும் மாணவர்கள் சுடர்களை ஏற்றி மலர் அஞ்சலி செலுத்த இருந்த வேளை அதை தடுத்ததோடு பின் அந்த இடத்தை விட்டு; பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்லுமாறும் இல்லையென்றால் உங்களை கைது செய்வோம் எனவும் மாணவர்களை பொலிஸார் மிரட்டியுள்ளதோடு மாணவர்களின் பெயர்களை சேகரிப்பதில் பொலிஸார் ஆர்வமாக இருந்துள்ளனர்.
எனினும், பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கஞ்சியினை பரிமாறும் செயற்பாடுகளை மாணவர்கள் முன்னெடுத்தபோது வீதியால் சென்ற கஞ்சியினை பெற வந்தவர்களை கூட பொலிஸார் அச்சுறுத்தி துரத்தியுள்ளனர்.
மேலும், தமது இறந்த உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமையினையும் சிங்கள பொலிஸார் மறுத்து முன்னெடுத்த அடாவடித்தனங்களை தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.