உள்நாட்டு செய்தி
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து அரசின் நிலைப்பாடு..!
அரச ஊழியர்களுக்கு இவ்வருடம் சம்பள உயர்வு வழங்க முடியாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரிவுக்குட்பட்ட பல ஊழியர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரிகளுடன் நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அடுத்த வருடம் அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும், இந்த வருடமும் சம்பள அதிகரிப்பு செய்யப்படுமானால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கால்நடை மருத்துவர்கள் சங்கம், கால்நடை மேம்பாட்டு ஆலோசகர்கள் சங்கம் மற்றும் கால்நடை மேம்பாட்டு துறை பணியாளர்கள் பிரதிநிதிகள் பலர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.