உள்நாட்டு செய்தி
கோவிலில் கஞ்சி காய்ச்சி பகிர்ந்த நான்கு தமிழர்கள் விளக்கமறியலில்
போரில் கொல்லப்பட்டு 15 வருடங்களாகியும் நீதி கிடைக்காத தமது அன்புக்குரியவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு (மே 12) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கமலேஸ்வரன் தென்னிலா, கமலேஸ்வரன் விஜிதா, செல்வ வினோத் சுஜானி மற்றும் நவரத்னராசா ஹரிஹரகுமார் ஆகிய நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (மே 13) மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண்களை பொலிஸ் சீருடையில் இருந்த ஆண்களால் கொடூரமாக தரையில் இழுத்துச் செல்வதையும் உள்ளூர்வாசிகள் காணொளி பதிவு செய்துள்ளனர்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட தமது அன்புக்குரியவர்களின் நினைவாக திருகோணமலை, சம்பூர் சேனையூர் பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்றைய தினம் காலை அப்பிரதேச மக்கள் கஞ்சி காய்ச்சுவதற்கு தயாராகினர்.
அப்போது, வெள்ள முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல், மக்கள் ஒன்றுகூடல் மற்றும் உணவு பானங்கள் வழங்குவதற்கு தடைவிதித்து நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவை அவ்விடத்திற்கு வந்த சம்பூர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடுக்க முற்பட்ட போது, போரில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்காகவே இந்த நிகழ்வை நடத்துவதாகக் கூறி அதனை மறுத்துள்ளனர்.
குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை 106 (1) பிரிவின் பிரகாரம் வழக்கு இலக்கம் A 12 211/24 வழக்கின் முறைப்பாட்டாளரான சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை கவனத்தில் கொண்டு மூதூர் நீதிமன்றால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கும் தடையுத்தரவு வழங்கப்படுவதாக, மே 12 நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் தடையால், நோய்க்கு மருந்தில்லாமல் பட்டினி கிடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றைய காலத்தில் உணவளித்ததை நினைவு கூர்ந்து, கனரக ஆயுதங்களால், பட்டினியால் அல்லது நோயினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப்படும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் நீதிமன்ற உத்தரவில் பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
“சம்பூர் பொலிஸ் பிரிவில் சட்ட ரீதியாக பிரயோசனமடைய கூடிய பொது இடங்களான பாடசாலை கோயில் போன்ற பொது இடங்களில் வெள்ளை முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களை ஞாபகார்த்தமூட்டும் எண்ணத்துடன் அதற்காக செயல்படுத்தல் சட்டவிரோதமான மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடிய வகையில் மக்களை ஒன்று கூட்டுதல், வாகன ஊர்வலம் மற்றும் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வகையில் பொது இடத்தில் ஒன்று கூட்டல் என்பன மக்களின் சுகாதாரத்துக்கு இடையூறான வகையில் ஏதாவது தொற்று நோய் ஏற்படக்கூடிய வகையில் உணவு உபகரணங்கள் அல்லது கஞ்சி, ஏதாவது குடிபானம் வழங்குவதற்காக மக்களை ஒன்று கூட்டுதல் அல்லது சுகாதாரம் மற்றும் மக்கள் உயிர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்த விதமான செயற்பாடுகளையும் செய்யாமல் இருப்பதற்கு…”
இந்த கட்டளை 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில், மாவீரர் சங்கத் தலைவர், கந்தையா காண்டீபன், மாவீரர் சாங்க உப தலைவர், சாந்தலிங்கம் கோபிராசா, மாவீரர் சங்க பொருளாளர் நவரத்னராசா ஹரிஹரகுமார், மாவீரர் சங்க செயலாளர் செல்வ வினோத் சுஜானி, மாவீரர் சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் வேறு நபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
போரின் இறுதி நாட்களில் கரையோரப் பகுதியில் சிக்கி, எறிகணைகளாலும், வான்வழித் தாக்குதல்களாலும், பீரங்கித் தாக்குதல்களாலும் சூழப்பட்டு நோய்களுக்கு மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ் மக்களின் பட்டினிச்சாவை போக்க ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ என்ற வரலாற்றுக் கஞ்சி சமைக்கப்பட்டது.
நிறைய தண்ணீரில் அரிசியை சேர்த்து இயலுமானால் கொஞ்சம் உப்பு சேர்க்கப்பட்டது.
தமிழ் இனப்படுகொலை வாரமானது இந்த ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி வடக்கு, கிழக்கில் வீடு வீடாகச் சேகரிக்கப்பட்ட அரிசியிலிருந்து சமைத்த கஞ்சியை வழங்கும் நிகழ்வோடு ஆரம்பமானது.
போரில் கொல்லப்பட்டு பதினைந்து வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காத தமது உறவுகளை நினைவு கூர்ந்து, மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுடன் தமிழர் நினைவேந்தல் வாரம் நிறைவுபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டிற்கு அமைய, போரில் கொல்லப்பட்ட நிராயுதபாணிகளின் எண்ணிக்கை குறைந்தது எழுபதாயிரம். இலங்கையின் முன்னைய அரசாங்கங்கள் அந்தப் புள்ளி விபரங்களை மறுத்துள்ளன.