உள்நாட்டு செய்தி
நாட்டில் மதுபான பாவனை குறைவடைந்தது..!
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுசாரப் பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வுக்காக நாடளாவிய ரீதியில் 415 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
அவர்களில் 192 பெண்களும் அடங்குவர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் படி இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக 64.4 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.
அதில் 26 சதவீதத்தினர் இந்த காலகட்டத்தில் மதுசாரப் பாவனையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனவும் 10 சதவீதத்தினர் மதுசாரப் பாவனை அதிகரித்திருந்ததாகவும் தகவல் வழங்கியுள்ளனர்.
புதுவருட கொண்டாட்டக் காலங்களில் மதுசாரப் பாவனை குறைவடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பான கருத்துக்களுக்கு மதுசாரத்தின் விலை அதிகரிப்பே காரணம் என,
ஆய்வில் பங்கேற்ற 71.5 சதவீதமானோர் தகவல் வழங்கியுள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இது சமூகத்தில் சிறந்த போக்கை எடுத்துக்காட்டுவதாகவும், சுகாதாரத்துறையின் அதிக செலவினத்தை தவிர்க்க முடியும் எனவும் அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.