உள்நாட்டு செய்தி
அனுரகுமார – வெளிநாட்டுத் தூதுக் குழுவினர் சந்திப்பு…!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சில வெளிநாட்டு தூதுக்குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோரை சந்தித்து அநுரகுமார திஸாநாயக்க கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் தீர்வுக்கான அணுகுமுறைகள் குறித்து தூதுக்குழு பிரதிநிதிகள் வினவியுள்ளனர்.
இதன்போது தேசிய மக்கள் சக்தி தாம் எந்தவொரு நிலையிலும் அரசியலுக்காக இனவாதத்தை பயன்படுத்த தயாரில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பிரச்சினைக்கு தனித்து ஒரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் அது ஏனைய காரணிகளுடன் பிணைந்து காணப்படுவதால் தீர்வினை எட்டும்போது ஒட்டுமொத்த விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தூதுக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விவகாரங்களில் சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் அக்கறை குறித்து தேசிய மக்கள் சக்தி தூதுக்குழுவின் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.