Connect with us

முக்கிய செய்தி

நாட்டின் பொருளாதார, வணிகம்,அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய ஜனாதிபதி உரை..!

Published

on

பொருளாதார மறுமலர்ச்சி வேலைத் திட்டத்தின் பெறுபேறுகள் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த இரண்டு வருட காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அஸ்வெசும திட்டம் மற்றும் நிவாரணத் திட்டங்களின் கீழ் நாட்டின் வறிய மக்களுக்கு பெருமளவிலான பணத்தை நேரடியாக வழங்குவதாகவும், சிறுநீரக நோயாளிகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு 2024 ஏப்ரல் முதல் 50 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

சமுர்த்தி நிவாரணத்தை விட மூன்று மடங்கிற்கும் அதிகமான தொகை வறிய மக்களுக்கு வழங்கப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த நிவாரணத் திட்டங்களுக்காக 205 பில்லியன் ரூபா செலவிடப்படும் எனவும், இதற்கு முன்னர் இந்தளவு பாரிய தொகை வறிய மக்களுக்காக ஒதுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   

ரூபா வலுப்பெற்றதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கமைய எரிவாயு, எரிபொருள், பால் மா ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளதாகவும் வட்டி வீதம் குறைந்தமையால் தொழில் முனைவோருக்கு அதிக வசதி, வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

2024 ஆம் ஆண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் விதம் மற்றும் அரச வருமான அதிகரிப்பு என்பவற்றின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டில் அரச துறையின் சம்பளத்தை மீள்பரிசீலனை செய்ய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்தார்.