உள்நாட்டு செய்தி
யாழில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு,மகன் கைது…!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழைப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது 16 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது அவரை அச்சுவேலி சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலமொன்று கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டிருந்தது.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகன், ‘மொபைல் கேம்ஸ்’ எனப்படும் கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் 16 வயதுடைய குறித்த சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் எனவும், அவரது அறையில் சில வாசகங்கள் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக குறித்த சிறுவன் தமது தாயை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான 16 வயதுடைய சிறுவன் நேற்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அச்சுவேலி சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்