உள்நாட்டு செய்தி
தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு!
நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறையை அறிவித்து, கிராம உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றும் (07) தொடர்கின்றது.
கொடுப்பனவுகளை அதிகரிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கோரி, நேற்றும் இன்றும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தமது தொழில் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வை வழங்காவிடின் அடுத்த வாரம் முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இதேவேளை கிராம உத்தியோகத்தர்களின் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் அவசியம் என அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் பீ.எம்.தீக்ஷன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கிராம உத்தியோகத்தர்களிடம் சேவைகளை பெற்றுக்கொள்ளச் சென்ற பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.