முக்கிய செய்தி
கொள்கலன் ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகள் 48 வீத அதிகரிப்பு..!
செங்கடலைச் சுற்றியுள்ள மத்திய வளைகுடா வலய போர்ச் சூழல் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கொள்கலன்கள் கையாளுதல் (ஏற்றி இறக்கும்) செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகவும்,
கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது அது 48 வீத அதிகரிப்பு என்றும் துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் பிரதான கொள்கலன் செயற்பாட்டாளர்களான துறைமுக அதிகார சபை கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் 4,41, 032 கொள்கலன்களை ஏற்றி இறக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இந்த வருடத்தில் அது 6,52, 766 ஆக அதிகரித்துள்ளளது. இது 48 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் துறைமுக அதிகார சபை இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 5,82,483 கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்துள்ளதாகவும்,
கடந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்துடன் ஒப்பிடுகையில் இது,49. 81 வீதமான அதிகரிப்பு என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேபோன்று முழுமையான கொழும்பு துறைமுகம், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 1, 729 ,314 கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்துள்ளது.
SLPA, CICT, ECT மற்றும் JCT ஆகிய முனையங்களின் மூலமே இந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் 24. 20 வீத அதிகரிப்பாகும் என்றும் துறைமுக அதிகார சபை தெரிவித்தது.
துறைமுக அதிகார சபையின் தலைவர் கீன் டீ பேர்னாட் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
தற்போது செங்கடலை சுற்றியுள்ள மத்திய வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் யுத்த நிலைமையால், கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் செயற்பாடுகள் குறுகிய காலத்தில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய வளைகுடா வலயத்தில் இயங்கும் சில முக்கிய கப்பல் வலையமைப்புகள் தற்போது யுத்த எச்சரிக்கை வலயங்களாக காணப்படுவதால்,
செங்கடல் மற்றும் சுயெஸ் கால்வாய் தவிர ஏனைய கப்பல்கள் தமது கொள்கலன் மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்தை தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எந்த ஒரு பூகோள நிலைமைகளையும் எதிர்கொள்ளக் கூடியதாக கொழும்பு துறைமுகம் காணப்படுவதால்,
நிலைமைகளை முகாமைத்துவம் செய்து சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.