உள்நாட்டு செய்தி
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை மீள ஆரம்பம்!
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து, காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி குறித்த கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே கப்பல் போக்குவரத்தை மீளவும் ஆரம்பிக்க வேண்டும் என பல வருடங்களாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கடந்த ஒக்டோபர் மாதம் நாகப்பட்டி னத்திலிருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.செரியபாணி என்ற கப்பலே இதன் போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கப்பல் சேவை ஒருவார காலத்திலேயே கைவிடப்பட்டது.அத்துடன் கப்பலில் போதுமான பயணிகள், பயணங்களில் ஈடுபடவில்லை என அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், மீளவும் குறித்த கப்பல் சேவை எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்காக, அந்தமானில் தயாரிக்கப்பட்ட சிவகங்கை என்ற கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளைக் கொண்ட குறித்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழிக் கட்டணமாக 34 ஆயிரத்து 200 ரூபாய் அறிவிடப்படவுள்ளது. அத்துடன், கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.எவ்வாறாயினும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.