உள்நாட்டு செய்தி
இந்தியா வெங்காயத்திற்கு தடை நீக்கம்
இலங்கை, வங்கதேசம் உள்பட 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் தொன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வெங்காயம், நாட்டின் பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஆனால் முந்தைய ஆண்டுகள விட கடந்த ஆண்டு வெங்காய உற்பத்தி குறைந்தது. இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.
இதையேற்ற மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் வெங்காய ஏற்றுமதி தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் நடைபெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 99 ஆயிரத்து 150 மெட்ரிக் தொன் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வெங்காயம் கிடைக்காத நிலையில் இலங்கையில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு ஒரு கிலோ வெங்காயம் ரூபா 800 வரை உயர்ந்துள்ளது.