Connect with us

உலகம்

காசாவில் ஏவுகணை தாக்குதலில் இறந்த தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையும் உயிரிழப்பு ! 

Published

on

 

காசாவில் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட ஏழரை மாத குழந்தை, 5 நாட்களுக்கு பின்பு உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படையினரை குறி வைத்து இஸ்ரேல் படையினர் போரை நடத்தி வருகின்றனர்.

7 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போரில், இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். காசா பகுதியில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் இந்த தாக்குதல்களில் உயிரிழந்திருப்பதாக காசா அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த வாரம் காசா பகுதியில் உள்ள ராஃபா பகுதியை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றது. இஸ்ரேல் விமானப்படை மற்றும் இராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 16 குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் சப்ரீன் அல்-சஹானி, அவரது கணவர் சுக்ரி மற்றும் 3 வயது குழந்தை மலாக் ஆகியோர் உறக்கத்திலிருந்து போது ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகினார். இதில் சுக்ரி மற்றும் மலாக் உயிரிழந்த நிலையில், சப்ரீன் கடுமையான காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். ஏழரை மாத கர்ப்பமாக இருந்த அவரது வயிற்றில் இருந்த சிசுவை, சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் உயிருடன் வெளியே எடுத்தனர். குறைப்பிரசவரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு தாயின் பெயரான சப்ரீன் எனப் பெயர் சூட்டிய மருத்துவர்கள், இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஒரு வார காலமாக இன்குபேட்டரில் இருந்த அந்தக் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் இரவு குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை குழந்தையின் உறவினர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.