Connect with us

முக்கிய செய்தி

இலங்கையில் கட்டமைத்த இனவழிப்பும் தமிழர்களின் இன சுத்திகரிப்பும் நூல் வெளியீட்டு

Published

on

இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழர்களாக இருப்பதால் காணப்படும் பிரச்சினை என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் முன்னாள் தலைவரும், பட்டய கணக்காளருமான செல்வேந்திரா சபாரட்ணம் எழுதிய “Structural Genocide and Ethnic Cleansing of Tamils in Sri Lanka” (இலங்கையில் கட்டமைத்த இனவழிப்பும் தமிழர்களின் இன சுத்திகரிப்பும்) என்ற நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமைத் தாங்கிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி விக்னேஸ்வரன், அவ்வாறு கேள்வி எழுப்புபவர்கள் இந்த புத்தகத்தை படித்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

“பல இடங்களில் சிங்களத் தலைவர்கள் எம்மிடம் கேட்கும் கேள்விதான் மற்றைய இலங்கை மக்களுக்கு ஏற்படாத அவலங்கள் எவற்றைத் தமிழ் மக்கள் அனுபவித்துள்ளார்கள் என்பது. நாம் இதுவரையில் ஒரு சிலவற்றை தெளிளிவுபடுத்தியிருந்தாலும் இனி வருங்காலத்தில் இந்த நூலை அவர்களுக்கு
அறிமுகப்படுத்தி “இதை வாசியுங்கள். உங்களுக்குப் புரியும்” என்று கூற இருக்கின்றோம்.”

“இலங்கையில் கட்டமைத்த இனவழிப்பும் தமிழர்களின் இன சுத்திகரிப்பும்” என்ற நூல் ஏப்ரல் 20ஆம் திகதி நல்லூரில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வெளியிடப்பட்டது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூலின் சிங்களம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் விரைவில் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய நூலின் ஆசிரியர் செல்வேந்திரா சபாரட்ணம், இந்நூல் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சி எனத் தெரிவித்தார்.

“ஜனநாயக விடயங்களை பேசுகின்ற மேற்கத்தேய நாடுகள் எல்லாம் இலங்கையில் ஜனநாயகம் இருப்பதாக கூறி அள்ளிக்கொடுக்கின்றன. ஜனநாயகம் இல்லை. இது ethnocracy. ethnocracy என்றால் ஒரு இனத்திற்கு அதிகாரங்களை கொடுக்கின்றீர்கள். கொடுத்துவிட்டு எங்களை அடிமைகளாக வைத்துள்ளீர்கள். எங்களையும் எங்கள் உரிமைகளையும் மதித்து நடக்க வேண்டுமென்ற ஒரு பொறுப்புள்ளது. ஆனால் அவர்கள் அவ்வாறு மதித்து நடக்கவில்லை. எங்களை அழிப்பதிலேயே இருக்கின்றனர். நாங்கள் தொடர்ந்து ஒன்றும் செய்யாவிட்டால் அழிந்துபோய்விடுவோம். அதனை தடுக்கும் வகையில்தான் இந்த முயற்சி.”

நூல் வெளியீட்டு விழாவில் நூல் தொடர்பான விமர்சனத்தை முன்வைத்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், ஈழத்தமிழ் மக்கள் மீதான படுகொலையின் வரலாறு இந்நூலில் 10 அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளதாக வலியுறுத்தினார்.

“ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட வரலாற்றுப் பக்கங்களை 10 அத்தியாயங்களாக இந்த நூல் கொண்டுள்ளது. இந்த 10 அத்தியாயங்கள் ஊடாக இலங்கையின் அரசியல் வரலாறு பேசப்படுகிறது. அந்த வரலாற்றுப் பக்கங்கள் ஊடாக ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் அந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து துயரமான சம்பவங்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“இலங்கையில் கட்டமைத்த இனவழிப்பும் தமிழர்களின் இன சுத்திகரிப்பும்” என்ற நூலின் முதல் பிரதியை அதன் ஆசிரியர் செல்வேந்திரா சபாரட்ணம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வழங்கி வைத்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *