முக்கிய செய்தி
இஸ்ரேலில் உள்ள 70% இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் !
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில் சுமார் 70 வீதமானோர் வீடுகளில் பாதுகாப்பாக பணியாற்றி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.அவர்களில் சுமார் 15 வீதமானோர் விவசாயத்துறையில் பணியாற்றுவதாகவும், ஏனையோர் கட்டுமானத்துறையிலும், ஏனைய துறைகளிலும் பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் லெபனான் எல்லைப் பகுதியினூடாக இடைக்கிடையே ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அந்த வலயத்தில் வசித்து வந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்த இடத்திலிருந்து தற்காலிகமாக வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே காணப்பட்ட இலங்கையர்களும் புதிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அந்த இலங்கையர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானித்து வருகிறது. பிரச்சினைகளுக்கு எவரேனும் முகங்கொடுத்தால், தூதரகத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் இருந்து ஐரோப்பாவிற்கு பயணிக்கும் பெரும்பாலான விமானங்கள் இஸ்ரேல் வலயத்தின் ஊடாகவே பயணிப்பதனால், விமானப் பயண மார்க்கத்தில் மாற்றம், பாதுகாப்பு காரணங்களினால் பயணம் தாமதமடைகின்றமை ஆகிய இடையூறுகள் ஏற்படலாம் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.