உள்நாட்டு செய்தி
நேர அட்டவணைக்கமைய நீர் விநியோகம் !
நேர அட்டவணைக்கமைய 18 நீர் வழங்கல் பிரிவுகளுக்கு நீர் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை தெரிவித்தது.குறிப்பிட்ட பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.கண்டி மாவட்டத்தின் உலப்பனை, பாரதிக்க, தொளுவ, கம்பளவத்த, புஸ்ஸல்லாவ, அங்கும்புர, மாரஸ்தென்ன, மெததும்பர, குண்டசாலை ஆகிய பகுதிகளுக்கு நேர அட்டவணைக்கமைய நீர் விநியோகிக்கப்படவுள்ளது.மாத்தளை மாவட்டத்தின் புஸ்ஸெல்ல பகுதியிலும், நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன், கொட்டகலை, ராகலை, ரிக்கில்கஸ்கட, மாத்தறை மாவட்டத்தின் ஊருபொக்க, ரதம்பல மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சூரிய ஆர ஆகிய பகுதிகளிலும் இவ்வாறு நேர அட்டவணைக்கமைய நீர் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளது.மழைக்காலம் ஆரம்பித்த பின்னர் நீரேந்து பகுதிகளில் காணப்படும் அபாய நிலை நீங்கும் பட்சத்தில், வழமையான முறையில் நீர் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.