உலகம்
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றால் இனி பரிசுத்தொகை: உலக தடகள அமைப்பு அறிவிப்பு!
உலக தடகள விளையாட்டு அமைப்பு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான பரிசுத் தொகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பரிசுத்தொகையை வழங்கும் முதல் சர்வதேச கூட்டமைப்பாக உலக தடகள விளையாட்டு மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.பாரிஸில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு நிதி ரீதியாக வெகுமதி அளிக்கப்பட உள்ளது. பாரிஸில் நடைபெறும் 48 தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு $50,000 (46,000 யூரோக்கள்) வழங்கப்படும்.அதேவேளை லொஸ் ஏஞ்சல்ஸில் 2028 ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன் கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கான பரிசுத் தொகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக தடகளப் போட்டிகளுக்கும் ஒட்டுமொத்த தடகள விளையாட்டுக்கும் ஒரு முக்கிய தருணமாகும், இது விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதற்கும் அவர்களின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதிலும் எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.லொஸ் ஏஞ்சல்ஸில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் மூன்று வீரர்களுக்கும் வெகுமதி அளிக்க உறுதியாக இருக்கிறோம். பாரிஸில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான தங்கப் பதக்க நிகழ்ச்சிகளுக்கு நிதியளிக்கும் நிலையில் நாங்கள் இப்போது இருக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.