Connect with us

முக்கிய செய்தி

தேர்தல் முறையை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

Published

on

 

தேர்தல் முறையை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர தெரிவித்துள்ளார்.

2023 ஒக்டோபர் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம்மாதம் 15 ஆம் திகதி நிறைவடையவிருந்தது.

இதேவேளை, தேர்தல் முறைமை திருத்துவது தொடர்பில் மூன்று உப குழுக்களின் அறிக்கைகளைப் பெற்று ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக செயலாளர் மாதவ தேவசுரேந்திர தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறை தொடர்பான அரசியலமைப்புச் சட்ட முன்மொழிவுகளை ஒரு உப குழு பரிசீலித்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. ஊடகப் பிரதிநிதித்துவம், பெண்களின் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை மற்றுமொரு உப குழு ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கவுள்ளது. மூன்றாவது உப குழு, தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகளை தயாரித்தல் மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பங்கு தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறையை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக, முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் ஜனாதிபதி இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.