உள்நாட்டு செய்தி
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: மறுக்கப்பட்ட நிதி மதிப்பீடு
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியில் பத்து மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் மீண்டும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நிபுணர்கள் குழு கோரிய பணத்திற்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததை அடுத்து பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
40 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மேலதிக பணிகளுக்கு 1.3 மில்லியன் ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவிக்கின்றார்.
பண மதிப்பீட்டை மீள்பரிசீலனை செய்யுமாறு நீதியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக மாவட்ட பிரதான பொது கணக்காளர் முல்லைத்தீவு(Mullaitivu) நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் பாரிய மனித புதைகுழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இன்று (ஏப்ரல் 04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளர் மயில்வானம் செல்வரத்தினம் இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சட்டத்தரணி வி. கே. நிரஞ்சன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
“ஏற்கனவே ஸ்கேன் பரிசோதனை மூலம் வீதிக்கு குறுக்காக மனிதஎலும்புக்கூடுகள் காணப்படுவதாகவும் அதனை அகழ்ந்து எடுக்கப்பட வேண்டிய தேவை இருந்ததாலும் இது தொடர்பிலான நிதி ஒதுக்கீடுகளுக்காக நீதிமன்றம் காத்திருந்தது.
அதன் அடிப்படையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பாதீட்டில் நீதி அமைச்சுக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில் 7 வீதம் இதற்கென செலவிட வேண்டியுள்ளதால் பாதீட்டை மீள் பரிசீலனை செய்து அதற்கான கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சு கோரியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகவே அதுத் தொடர்பிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர்தான் அமைச்சினால் இதற்கான நிதி ஒதுக்கப்படும்.” நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்த காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் பிரதிநிதிகளும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித உடல்கள் தொடர்பான மேலதிக தடயவியல் பரிசோதனைகளுக்கு பணம் கிடைக்கவில்லை என, முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள், தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சட்டவிரோதமாக புதைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என விசாரணைகளை முன்னெடுத்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ அண்மையில் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து அகழப்பட்ட சடலங்கள், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியில் இருந்த 1994-1996 காலப்பகுதியில் புதைக்கப்பட்டதென, அவர் முல்லைத்தீவு நீதிமன்றில் கையளித்த 35 பக்க இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, அப்போதைய பிரிகேடியர் ஜானக பெரேராவின் இலங்கை இராணுவத்தின் ஆறாவது ‘வெலிஒய’ படையணியின் கீழ் இருந்ததாக இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) வெளிப்படுத்தியுள்ளனர்.
“மேற்கூறிய காலப்பகுதியில், புதைகுழி அமைந்துள்ள இடத்திற்கு அண்மித்துள்ள கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம் லெப்டினன்ட் கேணல் ரோஹித விக்ரமதிலகவின் கீழ் நிலைகொண்டிருந்த நான்காவது கெமுனு ஹேவா படைப்பிரிவின் கட்டளையின் கீழ் இருந்தது.
பெப்ரவரி 1995 முதல் நவம்பர் 1996 வரை லெப்டினன்ட் கேணல் விக்கிரமதிலக அதற்கு கட்டளைத் தளபதியாக செயல்பட்டார்” என இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஊடக அறிக்கை குறிப்பிடுகின்றது.
முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவின் பங்கேற்புடன் 2023 செப்டெம்பர் முதல் நவம்பர் வரை 21 நாட்களில் இரண்டு கட்ட அகழ்வின் பின்னர் எடுக்கப்பட்ட 40 எலும்புக்கூடுகளும் (ஆண் மற்றும் பெண்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுடையது எனவும், அந்த உடல்கள் இரகசியமாக புதைக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் முன்னர் துப்பாக்கிச் சண்டையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது எனவும், இந்த போராளிகள் 1994ஆம் ஆண்டுக்கு முன்னர் அல்லது 1996ஆம் ஆண்டுக்கு பின்னர் புதைக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, தற்செயலாக மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நவம்பர் 29, 2023 புதன்கிழமை அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், வெகுஜன புதைகுழியை முழுமையாக அகழ்வதற்குத் தீர்மானிக்கப்பட்டதோடு, இடைநிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள் 2024 மார்ச் முதலாம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.