Sports
கேப்டனாக செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்’- ருத்துராஜ்
2024 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் இன்று முதல் ஆரம்பமாகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.டோனி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில் அவருக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்பதால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.டோனியின் முழுமையான ஒப்புதலுடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அணியின் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.2019 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக ஆடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட் கடந்த 3 சீசன்களாக அணியின் தவிர்க்க முடியாத வீரராகச் செயல்பட்டு வருகிறார்.கடந்த 3 சீசன்களில் சென்னை அணி 2 முறை கோப்பையை வென்றிருக்கிறது. ஓப்பனராக ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடியதும் மிக முக்கிய காரணமாக இருந்தது. டோனிக்குப் பிறகு ருத்துராஜ்தான் கேப்டனாக்கப்படுவார் எனும் செய்தி சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருந்தது.இந்நிலையில்தான் திடீரென அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.ருத்துராஜிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறித்து ருத்துராஜ் கெய்க்வாட் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். “இது ஒரு சிறந்த தருணம். இருப்பினும் பொறுப்புகள் அதிகமாக இருக்கிறது. கேப்டனாகச் செயல்பட ஆர்வமாக இருக்கிறேன். எங்கள் அணியில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்.டோனி, ஜடேஜா,ரஹானே எல்லாம் நல்ல கேப்டன்களாக இருந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் என்னை வழிநடத்துவார்கள். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சீசனை அனுபவித்து மகிழ்ச்சியாக ஆட காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.