முக்கிய செய்தி
மரதன் ஓடிய மாணவன் உயிரிழப்பு – கல்வி திணைக்களத்தின் அறிவிப்பு
அம்பாறை திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக இடம்பெற்ற மரதன் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.இன்றைய தினம் அதிகாரிகளை அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார்.பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக நேற்று காலை இடம்பெற்ற மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த குறித்த மாணவன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்தார்.வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தபோக்கு காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியை மறித்து நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்காரணமாக திருக்கோவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.இதனையடுத்து, எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பெருந்திரளானோர் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் வழியாக வைத்தியசாலைக்குள் பிரவேசித்தனர்.எவ்வாறாயினும், சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்