உள்நாட்டு செய்தி
தெருநாய்களின் எண்ணிக்கை குறித்த இராஜங்க அமைச்சரின் கூற்றுக்கு கால்நடை மருத்துவர்கள் கண்டனம் !
நாட்டில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான தெருநாய்கள் இருப்பதாகவும் சுற்றுலாப் பகுதிகளில் அவை மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் தெரிவித்த கூற்றை கால்நடை மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் தெருநாய்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தியதாகவும், எந்த தரவுகளின் அடிப்படையிலும் இல்லாத எண்ணிக்கையை அமைச்சர் மேற்கோள் காட்டுவதாகவும் கால்நடை மற்றும் மனிதநேய முகாமைத்துவத்திற்கான கால்நடை மருத்துவர்களின் சங்கம், டாக்டர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“2007ல் மூன்று மில்லியன் நாய்கள் இருந்தன. அப்போதுதான் அரசும் பல தனியார் அமைப்புகளும் கருத்தடை இயக்கத்தை ஆரம்பித்தன. இந்தத் திட்டங்களின் விளைவாக நாய்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது, இப்போது நாட்டில் 2.1 மில்லியனுக்கும் குறைவான நாய்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உரிமையாளர்களால் வளர்க்கப்படுகின்றன ” என்றார்.
இராஜாங்க அமைச்சர் பண்டார, நாட்டில் 6.2 மில்லியன் தெருநாய்கள் இருப்பதாக கூறுகிறார் , இது நாட்டிலுள்ள அனைத்து நாய்களை விடவும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் என்றும் நாணயக்கார கூறினார்.
“வீதியில் ஒரு நாயைப் பார்ப்பதால், அது உரிமையாளர் இல்லாமல் இருக்கிறது என்று அர்த்தமல்ல. இலங்கையில் பெரும்பாலான நாய் உரிமையாளர்கள் தங்கள் நாய்களை சுதந்திரமாக உலாவ அனுமதிக்கின்றனர். தெருநாய்கள் பொதுவாக மத வழிபாட்டுத் தலங்கள், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் பூங்காக்கள் மற்றும் கடைகளுக்கு அருகில் வாழ்கின்றன. எங்கள் கணக்கீட்டின்படி, 2.1 மில்லியனில் மூன்று சதவிகிதம் தெருநாய்களாகக் கருதப்படலாம்,” என்று அவர் கூறினார்.
இராஜாங்க அமைச்சரின் அறிக்கையானது நாய்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிவித்துள்ள நாணயக்கார சிகிரியாவை தெருநாய்கள் அச்சுறுத்தும் பிரதேசமாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், சிகிரியாவில் நாய்களின் எண்ணிக்கை முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த ஆறு வருடங்களாக அங்குள்ள பெரும்பாலான தெருக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொள்கை வகுப்பாளர்கள் தரவுகளால் ஆதரிக்கப்படாத அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று நாணயக்கார கூறினார்.
விலங்கு நல அமைப்புகள் ஆண்டுதோறும் 35,000 முதல் 40,000 விலங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதாக அவர் கூறினார்.