முக்கிய செய்தி
இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள் இலங்கை வருகை
இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளன.இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார் கண்காணிப்பு கப்பலும், அபினவ் எனப்படும் அதிவேக கண்காணிப்பு கப்பலும் வந்துள்ளன.குறித்த கப்பல்கள் 27ஆம் திகதி காலி துறைமுகத்தை வந்தடைந்ததுடன், மார்ச் முதலாம் திகதி வரை காலியில் தரித்திருக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னதாக, மார்ச் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன.இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தீயணைப்பு, சேதங்களைக் கட்டுப்படுத்துதல், சமுத்திர பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளன.பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு சவால்களை செயல்திறன் மிக்க முறையில் எதிர்கொள்ளும் வகையில், இலங்கை கடலோர காவல்படையின் திறன்களை அதிகரிப்பதற்கு இந்த கப்பல்களின் வருகை உதவும் என இலங்கை கடற்படை வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களில் இந்திய கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை நட்புறவை மேம்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.